கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்.


கடந்த ஆண்டுகளைப் போலவே கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்குவிண்ணப்பிப்போரின் எண்ணிக்கை, இந்த ஆண்டும் அதிகரித்துள்ளது.இந்த முறை விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகம் என்றும், வழக்கம்போல் வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் பல்வேறு கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இம்முறை முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டது. வழக்கமாக பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப விநியோகமும், சேர்க்கை நடைமுறைகளும் அரசு கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும்.இந்த நிலையில், அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவர்களையும் கவரும் வகையில், அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டது.பெரும்பாலான அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கால அவகாசமும் மே 20-ஆம் தேதியோடு முடிவடைந்தது. சில அரசு கல்லூரிகள் மே 21-ஆம் தேதி வரையிலும், சில தனியார் கல்லூரிகள் மே 22-ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் அளித்துள்ளன.இந்த நிலையில், புதன்கிழமை (மே 20) வரையிலான நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி முதல்வர் கே.ஆர். சீதாலட்சுமி கூறியது:விண்ணப்ப விநியோகம் புதன்கிழமையோடு (மே 20) முடிவடைந்த நிலையில், மாலை 5 மணி வரை 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன.இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த 2014-15 கல்வியாண்டில் சுமார் 13 ஆயிரம் விண்ணப்பங்களே விநியோகமாகின.மேலும், கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் படிப்பில் மூன்று பிரிவுகளின் கீழ் மொத்தம் 210 இடங்கள் உள்ளன. இதற்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

ராணி மேரி கல்லூரி முதல்வர் ஆர். அக்தர் பேகம் கூறியது:

விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு (மே 21) முடிவடைய உள்ள நிலையில், புதன்கிழமை வரை நிலவரப்படி 13,500 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன.கடந்த ஆண்டு மொத்தமாக அனைத்துப் படிப்புகளுக்கும் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் அளவுக்கே விநியோகமாகின.விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையும் நடைபெற உள்ளதால், விற்பனையாகியுள்ள மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை எட்ட வாய்ப்பு உள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் தொடர்ந்து சமர்ப்பித்து வருகின்றனர். இதுவரை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் பி.காம். படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்திருக்கின்றனர். சுமார் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் இந்தப் படிப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர ஆர்வம் காணப்படுகிறது என்றார். இதே கருத்தை சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் பிரேமானந்த பெருமாளும் தெரிவித்தார்.

இதுபோல் வியாசர்பாடி அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரி, பர்கூர் அரசு கல்லூரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், சென்னை கல்லூரி சாலை, அரும்பாக்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டுகளை விட அதிகமாக விற்பனையாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கல்லூரிகளிலும் பி.காம். படிப்புக்கே மாணவர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் மேலும் கூறியது:

இம்முறை தனியார் கல்லூரிகளுக்கு இணையாக, அரசு கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் முன்கூட்டியே ஆரம்பிக்கப்பட்டது மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.ஏனெனில், அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிகரித்திருக்கிறது. விண்ணப்பிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, படிப்பு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி