பி.இ. விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு: ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2015

பி.இ. விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு: ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், படிப்புக்கான இடங்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இதன் காரணமாக, வரும் கல்வி ஆண்டிலும் ஒரு லட்சத்துக்கு அதிகமான இடங்களில் சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.2015-16 கல்வி ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது.
சென்னையைத் தவிர்த்த பிற மையங்களில் புதன்கிழமை (மே 27) விண்ணப்ப விநியோகம் நிறைவடைந்தது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விற்பனை மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 29) விண்ணப்ப விநியோகம் நிறைவடைந்தது.கடந்த 2013-14 கல்வி ஆண்டில் 2.35 லட்சம் விண்ணப்பங்களும், 2014-15 கல்வி ஆண்டில் 2.13 லட்சம் விண்ணப்பங்களும் விநியோகமாகியிருந்தன.இந்த முறை 1 லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகமாகியுள்ளன. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 ஆயிரம் அளவுக்கு குறைவாகும்.
விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் குறைவு:
நிகழாண்டு 1.40 லட்சம் பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. கடைசித் தேதிக்கு முன்னதாக தபால் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் திங்கள்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதாலும், இணையதளம் மூலம் சிலர் விண்ணப்பித்திருப்பதாலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கை மேலும் 20 ஆயிரத்துக்கு அதிகரித்து மொத்தம் 1.60 லட்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 2013-14 கல்வியாண்டில் 1.90 லட்சம் பேரும், 2014-15 கல்வியாண்டில் 1.75 லட்சம் பேரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இந்த முறை விண்ணப்பித்தோர் எண்ணிக்கைக் குறைந்திருப்பதால், கடந்த ஆண்டைப்போலவே ஒரு லட்சம் இடங்களுக்கு சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 2014-15 கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் 2.87 லட்சம் இடங்கள் இடம்பெற்றிருந்தன. இதில், 1 லட்சத்து 9,079 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின. 1 லட்சத்து 2,510 இடங்கள் காலியாக இருந்தன.
இதுபோல, இந்த முறை 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.70 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. கலந்தாய்வுக்கு இடையே, தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைக்கும் என்பதால் இடங்களின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது.இதில், 1.10 லட்சம் இடங்கள் நிரம்பி, 1.20 லட்சம் இடங்கள் சேர்க்கைநடைபெறாமல் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி