நெருங்குகிறது தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் - மனநல நிபுணர்கள் சொல்வது என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2015

நெருங்குகிறது தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் - மனநல நிபுணர்கள் சொல்வது என்ன?


கோடைகாலம் துவங்கினாலே, விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில், தேர்வு முடிவுகளை நினைத்து, பதட்டத்தில் பரிதவிக்கும்மாணவர்கள் பலர் உள்ளனர். இச்சமயத்தில், பெற்றோர் உஷாராக செயல்பட வேண்டியது அவசியம் என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படவுள்ளது. தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல், மாணவர்கள் மத்தியில் தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு போன்ற காரணங்களால், தற்கொலை பாதிப்பும் கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தோல்வி அடைந்த மாணவன் மட்டும் அல்லாமல், 1,000க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மதிப்பெண் குறைவு என தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது, இன்றைய கல்வி முறையின் அவலம்.இந்தியாவில், மன அழுத்தம் காரணமாக மட்டும், ஆண்டுதோறும் 4,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். குறிப்பாக, தேர்வு நேரத்திலும், முடிவுகள் வெளிவந்த பின் 90 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை முயற்சியும், ஆறு மணி நேரத்திற்கு ஒருவர் தற்கொலையும் செய்வதாக தேசிய குற்றவியல் ஆய்வகம் சர்வேயில் தெரிவிக்கிறது.கடந்த 2012 - 13ம் கல்வியாண்டு தேர்வு முடிவு வெளியிட்ட பின், தமிழகத்தில் 18 மாணவர்களும், 2013 - 14ம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில் 30 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

இச்சூழலில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனநிலையை ஆய்வு செய்வது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் பிள்ளைகளிடம், எதிலும் விருப்பமின்றி இருத்தல், துாக்கமின்மை அல்லது அதிக துாக்கம், சரியாக சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகம் சாப்பிடுவது, தன் சுகாதாரத்தில் அக்கறையில்லாமல் இருப்பது, மற்றவர்களுடன் அதிகம் கலந்து பழகாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உள்ளதா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இவை அனைத்தும் மன அழுத்தம் இருப்பதன் அறிகுறிகள்.மாணவர்களிடம், மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால், தோல்வி முடிவால் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதை பெற்றோர் புரிந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும். மதிப்பெண்கள் என்பது மட்டும் வாழ்க்கையல்ல என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

இதுகுறித்து, குடும்பநல ஆலோசகர் மகேஷ் கூறியதாவது:

தேர்வு முடிவை எதிர்கொள்ளும், தன்னம்பிக்கை, தைரியத்தை வழங்க வேண்டியது பெற்றோரது கடமை. மன அழுத்தத்துடன் மாணவர்கள் இருப்பதை கண்டறிந்தால், மனம்விட்டு வெளிப்படையாக பேச தயங்க வேண்டாம்.தேர்வு முடிவு எதுவாக இருப்பினும், ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை மாணவர்களின் மனதில் பெற்றோர் விதைக்க வேண்டும்.மாணவர்களின் போக்கில், மாற்றங்கள் எழுந்தால், அவர்களின் மனதில் உள்ள எண்ணத்தை வெளிப்படையாகவே கேளுங்கள். அதிக நேரத்தை செலவிட்டு, அவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுங்கள். மகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்தி, மனதின் போக்கை திருப்புங்கள். அதிகப்படியான மனஅழுத்தம் இருந்தால் ஆலோசகர்களை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சேவை மையம் ரெடி:

தற்கொலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் எழும் மாணவர்கள் தற்கொலை தடுப்பு, 24 மணிநேர சேவை மையத்தை 044 - 24640050 மற்றும் 24640060 ஆகிய தொலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம். இதுபோன்ற, பல இடங்களில் தற்கொலை தடுப்பு சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் எண்களை, இணையதளங்களில் மாணவர்களும், பெற்றோர்களும் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி