மாணவர்களை தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்!-விகடன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2015

மாணவர்களை தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்!-விகடன்


பிரபலமான கல்வி நிறுவனங்களில் தங்களுடைய குழந்தை படித்தால், நல்ல நிலைமைக்கு வந்து விடுவான் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. ஆனால்அது உண்மையல்ல. படிக்கிற குழந்தை எங்கு படித்தாலும் நல்ல மதிப்பெண் பெறுவது இயல்பு.
அதே நேரத்தில் அந்தக் குழந்தை படிக்கிற கல்வி நிலையையும், அதிக மதிப்பெண்கள் எடுப்பதையும் தீர்மானிப்பதில் சூழ்நிலையும், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு மாணவனையும் ஊக்கப்படுத்துவதே ஆசிரியரின் கடமை.பெற்றோரின் மன ஓட்டத்தை அறிந்த சில தனியார் கல்வி நிறுவனங்கள், அதை தங்களின் வணிகத்துக்கான வாய்ப்பாக மாற்றி விட்டார்கள். இதுவே கல்வி வணிகமயமாக்கியதற்கு முக்கிய காரணம். மாநில அளவில் ரேங்க் பெறும் கல்வி நிலையங்களில் கட்டண விவரத்தை கேட்டாலே தலைசுற்றுகிறது. அதையும் செலுத்தி தங்களது குழந்தைகளை சேர்க்க பலர் தயாராக இருக்கிறார்கள். பிரிகேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி.யில் சேருவதற்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் வாசலில் இரவுமுழுவதும் காத்திருந்து விண்ணப்பப் படிவத்தை பெறும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.அன்பளிப்பு என்ற பெயரில் பெற்றோரின் வருமானத்தில் முக்கால் வாசியை தனியார்கல்வி நிறுவனங்கள் சுருட்டிக் கொள்கின்றன.

தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்க போராடுகிறார்கள் பெற்றோர்கள். ஆனால் அதே நேரத்தில் மாநகராட்சிப் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் மாணவர்கள் சேர்க்கையில்லாமல் காற்றுவாங்குவது வேதனையாக இருக்கிறது.அரசு மாநகராட்சி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் சமச்சீர் என்ற ஒரே பாடத்திட்டத்தில்தான் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகவும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவும் இருக்கின்றன. இதற்கு தனியார் பள்ளிகள் மீதுள்ள மோகமேகாரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள். கலர் கலராய் சீருடை அணிந்தும், டை, ஷூ போட்டு குழந்தைகள் செல்வதையே பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதிலும் கிராமங்களில் ஆங்கில வழிக்கல்வி கற்றுக் கொடுக்கும் கல்வி நிலையங்களில் தங்களது பிள்ளைகள் கற்ற 'மம்மி', 'டாடி' என்ற வார்த்தைகளை வீடுகளில் உச்சரிக்கும் போது பெற்றோரின் மனம் குளிர்ந்து விடுகிறது.

நகரங்களிலும், கிராமங்களிலும் அரசு பள்ளிகள் மீது மக்களின் தவறான பார்வை இருக்கிறது. அரசுப்பள்ளி என்றால் ஆசிரியர்கள் பாடமே கற்றுக் கொடுப்பதில்லை. இதனால் தங்களின் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் தனியார் பள்ளியை நாடி ஓடுகின்றனர்.இதற்கு அரசு பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்களே காரணம் எனலாம். அதற்காக ஒட்டுமொத்த அரசுப்பள்ளிகள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதால் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்களே ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டுமே அரசு நிர்ணயிக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. அத்தகைய பள்ளிகளில் மட்டுமே தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததாலும், கல்வியில் தேர்ச்சி விகிதம் குறைந்ததாலும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (நெட்) கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே பணியும் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசு, மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தி வரும் அரசு, உள்கட்டமைப்பு வசதிகளில் கவனக்குறைவாகவே இருக்கிறது என்று சொல்லலாம். சில அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதியான கழிவறை கூட இல்லை. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியது அரசு, அதிகாரிகளின் கடமை.பொதுத்தேர்வு முடிந்து ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை காலம் வேதனை காலமாக மாறி இருக்கிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளியில் இல்லை என்றால் அந்த பள்ளிக்கு மூடு விழா நடத்தப்படுவதோடு அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், டிப்ளாய்மெண்ட் என்ற பெயரில் வேறுப்பள்ளிகளுக்கு தூக்கி அடிக்கப்படுகிறார்கள். இதற்குப் பயந்துசில அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கையில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்கள். இத்தகைய ஆசிரியர்களில் சிலர், வறுமையில் வாடும் பெற்றோர்களிடம், 'பிள்ளைகளை பள்ளி அனுப்புங்கள், அவர்களுக்காக நீங்கள் எதையும் செலவழிக்க வேண்டாம். எல்லா தேவைகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்' என்று பேசி மாணவ சேர்க்கையை அதிகப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்கும் சில பெற்றோர்கள் செவிசாய்ப்பதில்லை. இதனால் சில பள்ளி ஆசிரியர்கள் தங்களின் சம்பளத்தில் சிறிய தொகையை பெற்றோருக்கு கொடுத்து மாணவர்களை அரசு பள்ளிக்கு அழைத்து வருகிறார்கள்.

அதோடு அந்த மாணவனின் பள்ளியின் முழுதேவையையும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே பூர்த்தி செய்கிறார்கள். இதில் ஆசிரியர்களுக்கு ஒருவகையில் சுயநலமும் இருக்கிறது.இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சில ஆசிரியர்கள் கூறுகையில்,"ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதற்கு அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு இருக்கும் ஒரு தவறான கண்ணோட்டம் காரணமாக இருக்கிறது.பெரும்பாலும் அரசு, மாநகராட்சி பள்ளிகளில் வறுமை கோட்டின் கீழ் வாழுபவர்களின் குழந்தைகளே சேர்க்கப்படுகிறார்கள். சென்னைப் போன்ற நகரங்களில் குடிசைப்பகுதிகளை காலி செய்யும் போது அந்தப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறது. இதற்கு பல சம்பவங்களை சுட்டிக்காட்டலாம்.மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் உடனடியாக அந்தப்பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் இடமாற்றப்படுகிறார்கள்.

சில நேரங்களில் அந்த பள்ளிக்கே மூடு விழா நடத்தப்பட்டு விடுகிறது. எனவே அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அதிகாரிகளும், அரசும் அக்கறை செலுத்த வேண்டும். சில ஆண்டுக்கு முன்பு மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ஆங்கில வழிக்கல்வியை கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இது சில பள்ளிகளில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.ஆசிரியர் பணி என்பது மாணவர்களைப் போல தாங்களும் ஒவ்வொரு நாளும் கற்க வேண்டும். அவ்வாறு கற்றால் மட்டுமே இன்றையக் காலக்கட்டத்துக்கு ஏற்ப கற்றுக் கொடுக்க முடியும். அதற்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு பள்ளி என்பதால் தங்களை யாரும் கண்காணிக்க மாட்டார்கள் என்ற மமதை சில ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அவர்கள் செய்யும் தவறே ஒட்டுமொத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கெட்ட பெயரைஏற்படுத்தி விடுகிறது.

இன்றையக் காலக்கட்டத்தில் தேர்வு நடத்தி தகுதியான ஆசிரியர்களே அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களும் தங்களின் பொறுப்பை சரியாக செய்தால் அரசு பள்ளிகளின் தரமும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயரும். தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு அரசு பள்ளிகளையும் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அரசுக்கு உள்ளது.ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும்,மாநில அளவில் முதலிடத்தைப் பிடிப்பார்கள்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி