வேலைவாய்ப்பு, சம்பளம்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதால், தனியார் கல்லுாரிகளில் வரலாறு, தமிழ் இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அரியபாடப்பிரிவுகள் அழிவின் விளிம்பில் உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தது முதல், தனியார் கல்லுாரிகளில் மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.
பல லட்சம் செலவழித்து, மருத்துவம், பொறியியல், ஐ.டி., கணிதம், இயற்பியல், வேதியியல், பி.ஏ., ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளை தேர்வு செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களும், மாணவர்களும் சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அரிய பாடப்பிரிவுகளைதேர்வு செய்ய விரும்புவதில்லை.கோவை மாவட்டத்தில், ௯௬ கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில், பி.ஏ., பொருளாதாரம் பாடப்பிரிவு அரசு கல்லுாரி, நிர்மலா, கிருஷ்ணம்மாள், கொங்கு, கொங்குநாடு, சி.பி.எம் உட்பட ஏழு கல்லுாரிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அதே போல், பி.ஏ., வரலாறு துறை, மூன்று தனியார் கல்லுாரிகளில் மட்டுமே உள்ளது. பி.ஏ., அரசியல் அறிவியல்துறை மற்றும் தமிழ் இலக்கியம், எந்த தனியார் கல்லுாரிகளிலும் செயல்பாட்டில் இல்லை.மாநிலம் முழுவதும், 95 சதவீதம் பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.காம்., பி.காம்.,- சிஏ., பி.காம்., -சி.எஸ்., பி.சி.ஏ., உள்ளிட்ட துறைகள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. பழமையான முன்னணி கல்லுாரிகளில் செயல்பட்டு வந்த அரிய பாடப்பிரிவுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.மேற்கத்திய நாடுகளிலும், வட மாநிலங்களிலும் இதுபோன்ற அரியபாடப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப பாடங்களை காட்டிலும் அதிக மவுசு உள்ளது. ஆனால், அடிப்படையில் மதிப்பெண், வேலை, சம்பளம் என்ற நோக்கத்தில், தமிழக கல்விமுறை, பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களை தயார்படுத்துவதால், நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.பொருளாதாரம், வரலாறு, அரசியல், அறவியல் உள்ளிட்ட பாடங்கள் சார்ந்த அறிவு, ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இல்லாமல் போகும் அபாயம் எழுந்துள்ளது. அடிப்படை, பள்ளி பாடத்திட்டத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றி அமைப்பது அவசியம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் மற்றும் அரசு கல்லுாரி பேராசிரியர் கனகராஜ் கூறியதாவது:தமிழகத்தில் சமூக அறிவியல் சார்ந்த பாடங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. நவீன உலகில், அமெரிக்கா கல்வித்துறை நல்ல வளர்ச்சி நிலையில் இருப்பதற்கு, அனைத்து துறைக்கும் சமமாக கொடுக்கும் முக்கியத்துவமே காரணம்.நம்மிடையே, படிப்பு என்பது வேலைக்கே என்ற எண்ணம் உருவாகியுள்ளது. சமூகஅறிவியல் சார்ந்த பாடங்களை எடுப்பவர்கள் பொது போட்டித்தேர்வுகள், தலைமைப்பண்பு தேவைப்படும் பணிகள், ஊடகத்துறை, ஆய்வுத்துறை போன்ற பலதுறைகளில் சாதிக்கலாம்.தற்போது, அதிகரிக்கும் சமூக குற்றங்களுக்கும் இதுவே அடிப்படை காரணம். சமூக அக்கறை இல்லாமல் இளைஞர்களை உருவாக்கி வருகின்றோம்.இவ்வாறு, அவர்கூறினார்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறுகையில்,''ஒரு கல்லுாரி பாடப்பிரிவுகளை துவக்க அனுமதி கோரினால், அக்கல்லுாரியில் பேராசிரியர்கள் தகுதி, வகுப்பறைகள் உள்ளதா, ஆய்வகங்கள் உள்ளதா போன்றவற்றை ஆய்வு செய்து அனுமதி வழங்குவது மட்டுமே பல்கலையின் பொறுப்பு. இத்துறையை நடத்தவேண்டும், என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. பி.ஏ., தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்ற துறைகளில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைகிறது என்பதே வேதனை,'' என்றார்.
ஆசிரியர்களுக்கும் இனி தட்டுப்பாடு:
கோவை உட்பட, மாநில அளவில் பெரும்பாலான தனியார் கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ் இலக்கியத்துறை செயல்பாட்டில் இல்லை. உதாரணமாக கோவையில், அரசு கலை கல்லுாரியில் மட்டுமே இத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில், எதிர்காலத்தில் தமிழ் ஆசிரியர்களே இல்லாத அபாயமும், தமிழ் கலாசாரம், வரலாறு, பண்பாடு நுாலகங்களோடு புதைந்துவிடும் சூழலும் எழுந்துள்ளது.
இறைவன் வளர்த்த தமிழுக்கா இந்த நிலை
ReplyDeleteKazhuthaiku theriuma karpoora vasanai.
ReplyDeleteTamizhum saagum Adhanai peni valarkaadha tamizhanum ine saavaan
ReplyDelete