சென்னையில் 2,350 பள்ளி செல்லா குழந்தைகள்; அதில் 957 பேர் குழந்தை தொழிலாளர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2015

சென்னையில் 2,350 பள்ளி செல்லா குழந்தைகள்; அதில் 957 பேர் குழந்தை தொழிலாளர்கள்.

சென்னை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தை தொழிலாளர் மீட்பு குழு ஆகியோர் நடத்திய ஆய்வில், 2,350 குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் என, கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில், 957 பேர், குழந்தை தொழிலாளர்கள் என, கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு உள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தைதொழிலாளர் மீட்பு குழு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில், ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். நடவடிக்கை அதில், கண்டறியப்படும் குழந்தைகள், மாநகராட்சி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், உண்டு, உறைவிட பள்ளிகளிலும் சேர்க்கப்படுவர். இந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஏப்ரல்,மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், 2,350 பேர் பள்ளி செல்லா குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் மட்டும், 1,249 குழந்தைகளை கண்டறிந்து உள்ளது. குழந்தை தொழிலாளர் மீட்பு குழுவினர், 957 பேரை மீட்டு, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சியின், 10 மண்டலங்களில் நடந்த கணக்கெடுப்பில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 199 பேரும், தி.நகரில் குறைந்தபட்சமாக 87 பேரும் கண்டறியப்பட்டு உள்ளனர். ஆந்திரா, ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநில குழந்தைகள் 54 பேர், பள்ளி செல்லாதவர்களாக உள்ளனர். அவர்களின் பெற்றோர் சென்னையில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு ஒரு இடத்தில் பணி செய்ய செல்வதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என, அவர்கள் கூறிஉள்ளனர். இதுபோன்ற குழந்தைகளை அந்தந்த கட்டட பணி நடைபெறும் இடத்திலேயே, தனியாக அவர்கள் மொழி ஆசிரியரை நியமித்து, கல்வி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக தெலுங்கு, ஒரியா, இந்தி ஆகிய மொழி பாட புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது: வறுமையின் காரணமாக, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ள பெற்றோரிடம், அரசு திட்டங்களை எடுத்துரைத்து, குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கிறோம். கூலி தொழிலாளர்கள் இடம் பெயர்வு அதிகமாக இருப்பதாலும், பள்ளி செல்லா குழந்தைகள் அதிகமாக உள்ளனர். ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. குழந்தை தொழிலாளர்கள் இம்முறை அதிகமாக மீட்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி