பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது: முதல்நாள் விளையாட்டு பிரிவில் 500 இடங்கள் நிரம்பின - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2015

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது: முதல்நாள் விளையாட்டு பிரிவில் 500 இடங்கள் நிரம்பின

பொறியியல் படிப்பில் மாணவர் களை சேர்ப்பதற்கான கலந் தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாளில் நடந்த விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 500 இடங்கள் நிரம்பின.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் 538 உள்ளன.
இவற்றில் அரசு ஒதுக்கீட்டுக்கான சுமார் 2 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 54 ஆயிரம் மாணவர்களே விண்ணப்பித்திருந்தனர்.அவர்களுக்கான ரேண்டம் எண், கடந்த 15-ம் தேதி வெளி யிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 19-ம் தேதி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 23 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந் தனர். 28, 29-ம் தேதிகளில் சிறப்புப் பிரிவினருக்கும் ஜூலை 1 முதல்பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

முதல் நாளில் சிறப்புப் பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டன. இந்தப் பிரிவில் மொத்தமுள்ள 500 இடங்களுக்கு 1000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு விளையாட்டுப் பிரிவில் மொத்தமுள்ள 500 இடங்களுக்கு 1000 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள், ஜூலை 1-ம் தேதி தொடங்கும் பொது கலந்தாய்வில் பங்கேற்கலாம்’’ என்றார்.விளையாட்டுப் பிரிவினருக் கான தரவரிசைப் பட்டியலில் முதல் 4 இடங்களை மாணவர்களும், 5-வது இடத்தை ஒரு மாணவியும் பிடித்திருந்தனர். முதல் இடம் பிடித்த அஸ்வின் ஆப்ரஹாம் ரோசாரியா (மெக்கானிக்கல்), 2-ம் இடம் பிடித்த ஆகாஷ் (இன்டஸ்ட்ரியல்), 3-ம் இடம் பிடித்த கிரிமன் ஜா (எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன்), 5-வது இடம் பிடித்த முக்தா மல்லா ரெட்டி (சிவில்) ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியை தேர்வு செய்தனர்.சென்னையைச் சேர்ந்த ரோல்லர் ஸ்கேட்டிங் வீரரான அஸ்வின் ஆப்ரஹாம் கூறும் போது, ‘‘விளையாட்டுப் பிரிவில் இடம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பொறியியல் படித்தாலும் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்துவேன்’’ என்றார்.இரண்டாவது மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த ஆகாஷ், கிரிமன் ஜா இருவரும் சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கு கின்றனர். நீச்சலில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள மாணவி முக்தா மல்லா ரெட்டி கூறும்போது, “மருத்துவம்தான் என் முதல் விருப்பம். ஒரு இடம் வித்தியாசத்தில் மருத்துவபடிப்பு கிடைக்கவில்லை. தற்போது தேர்ந்தெடுத்துள்ள கட்டிடக் கலையில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்வேன்’’ என்றார்.இரண்டாவது நாளான இன்று, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்தப் பிரிவில் மொத்தம் 6 ஆயிரம் இடங்கள் இருந்தபோதும், இதற்கு 350 பேர் மட்டுமே விண்ணப் பித்திருந்தனர். அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்கள் பொதுப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படும்.

பொதுப் பிரிவுக்கான கலந் தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொது கலந்தாய்வுக்கு தினமும் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் அமர்ந்து கல்லூரி நிலவரங்களை அறிந்துகொள் ளும் வகையில் மிகப் பெரிய கணினி திரைகள் கொண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது . வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது.குடிநீர், கழிப்பிட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு முதல் உதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக் கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்புபவர்கள் கலந்தாய்வு அரங்குக்கு அருகில் உள்ள போலீஸ் பூத்தை தொடர்பு கொள்ளலாம். கலந்தாய்வு நடைபெறும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த நீண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி