7ம் வகுப்பிற்கு இனி கல்வித்தகுதி... தேர்வு:மாணவர்களின் கல்வித்திறன் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2015

7ம் வகுப்பிற்கு இனி கல்வித்தகுதி... தேர்வு:மாணவர்களின் கல்வித்திறன் ஆய்வு

பெங்களூரு: ''அடுத்தாண்டு, ஜனவரி முதல் வாரத்தில், மாநிலம் முழுவதும் அரசு, தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வித்தகுதி தேர்வு நடத்தப்படும். இதனால், பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளின் கல்வித்திறன்எப்படி உள்ளது என்பது பற்றி தெரியவரும்,” என்று, துவக்கக் கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.கேம்பஸ் ஜிப் நிறுவனம், பெங்களூரு பிரஸ் கிளப்பில், ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 'எஜூகேசன் 2020 மொபைல் ஆப்ஸ்' ஐ வெளியிட்டு, அமைச்சர் கிம்மனே ரத்னாகர் பேசியதாவது:

தகுதித்தேர்வு:
ஏழாம் வகுப்பில், ஐந்து பாடங்களுக்கு, 100 மதிப்பெண்ணில் தகுதித்தேர்வு நடத்தப்படும்; இதில் வெற்றி - தோல்வி என்பது இருக்காது. மாணவர்களின் கல்வித்திறன் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது; இதற்கான முன்னேற்பாடு நடந்து வருகின்றன.மாநிலம் முழுவதும், ஒரே நாளில், கல்வி தகுதித்தேர்வு, காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கவுள்ளது. தற்போது முதல் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரை, மாணவர்கள் நேரடியாக தேர்ச்சி பெறுவதால், அவர்களின் கல்வித்திறன் குறித்து பெற்றோருக்கு தெரிவதில்லை. 10ம் வகுப்பு தேர்வு முடிவு வரும்போது தான் தெரியும். எனவே, அதற்கு முன்னதாக, ஏழாம் வகுப்பில் மாணவர்களின் கல்வித்திறன் தெரிந்தால், அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் பாடம் கற்பிப்பது சாத்தியமாகும்.
சிறப்பு வகுப்புகள்:
இறுதி தேர்வுக்கு, இரு மாதங்களுக்கு முன்னதாக, கல்வித் தகுதித்தேர்வு நடத்தப்படும்; இத்தேர்வில், தேர்ச்சி பெறாத மாணவர்களின் பெற்றோருடன் விவாதித்து, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.வெளிநாடுகளில், டாக்டர்கள், ஆசிரியர்கள் தகுதித்திறனை தெரிந்து கொள்வதற்காக, இரு ஆண்டுகளுக்கு, ஒருமுறை தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் அதுபோன்ற நடைமுறை இல்லை. தற்போதைய, அதிநவீன கல்வி நடைமுறைக்கு, பிள்ளைகளை தயாராக்க வேண்டியது, ஒவ்வொருவரின் பொறுப்பு.கிராம பஞ்சாயத்து தேர்தல் நடந்ததால், ஆசிரியர்கள் இடமாற்றம் தாமதமானது. எந்த அரசு ஊழியர்களும் இடமாற்றம் செய்யப்படக் கூடாது என்று, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.தேர்தல் விதிமுறை அமலில் இருந்ததால், அரசு ஊழியர்கள் இடமாற்றம், வரும் 27ம் தேதி நடக்கும். ஜூன் 5ம் தேதிக்குள், ஆசிரியர்கள் இடமாற்றத்தை முடித்திருக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து தேர்தல் நடந்ததால், இடமாற்ற ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படக்கூடாது. வரும் 27ம் தேதிக்குள், இடமாற்ற செயல்பாடுகள் முடிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வரவேற்பு:
ஏழாம் வகுப்பிற்கு கல்வித் தகுதித்தேர்வு நடத்தப்படும் அறிவிப்பு குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மாணவனின், உள்வாங்கும் திறன் பற்றி ஆசிரியர் பெரும்பாலும் அறிந்துக்கொள்வது, தேர்வு வழியாகத் தான். ஆனால், அனைவரும் தேர்ச்சி அடிப்படையில், ஏதும் அறியாத மாணவர்களும் தேர்வாகி விடுகின்றனர். இது, மாணவனின் குறை அல்ல; அவனின் குறை கண்டறியப்பட்டு, முறையாக களையப்படவில்லை.சில மாணவர்கள், 10ம் வகுப்பிலும், அடிப்படை கல்வி அளவிற்கான பாடத்தைக் கூட அறியாமல் உள்ளனர். அவர்களின் திறன் பற்றி, 10ம் வகுப்பு தேர்வு முடிவின் போது, பெற்றோருக்கு தெரியவருவதால் பலனில்லை. அவ்வகையில், தன் பிள்ளையின் கல்வித்திறனை, ஏழாம் வகுப்பிலேயே, பெற்றோர் தெரிந்துக் கொள்வது, மாணவனின் கல்வித்திறன் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். தேர்வு நடத்துவதிலும், விடைத்தாள்திருத்துவதிலும், அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி