இலவச பாட புத்தகம் வழங்குவதில் குளறுபடி:தினமும் அலையும் ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2015

இலவச பாட புத்தகம் வழங்குவதில் குளறுபடி:தினமும் அலையும் ஆசிரியர்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் வழங்குவதில்,சரியான நடைமுறைகளைப் பின்பற்றாததால், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாகியுள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில், இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கும் முன், மே மாதத்தில் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாடநுால் கழக மண்டல அலுவலகங்கள் மற்றும் கிடங்குகள் மூலம், புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒரு மாதத்துக்கு முன், புத்தகம் வழங்கும் பணி துவங்கினாலும், இன்னும் இழுபறி நிலையே உள்ளது. தினமும், ஒரு சில வகுப்புகளுக்கு, ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே, பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு பள்ளி அல்லது மண்டல அலுவலகங்களை குறிப்பிட்டு, அங்கு சென்று புத்தகங்கள் எடுத்துக் கொள்ள, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
ஆனால், புத்தகங்களை சுமக்க தனி ஊழியர்களோ, எடுத்து வர தனி வாகன வசதியோ அளிக்கப்படுவதில்லை. அத்துடன், 'ஸ்டாக்' சரியாக வைக்காத தால், தினமும் ஏதாவது ஒருவகுப்புக்கான புத்தகங்கள் கிடைப்பதில்லை என, ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். புத்தகத் தேவையை முன்கூட்டியே சரியாகக் கணக்கிட்டு, அச்சிடுவதில் முறையாகத் திட்டமிட்டு, புத்தகக் கிடங்குகளுக்கு கொண்டு வந்திருக்கலாம். மாறாக சரியாகத் திட்டமிடாமல், சில புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டும், சில புத்தகங்கள் இருப்பு இல்லாமலும், ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, 'மற்ற இலவச பொருட்களை வாகனங்களில் ஏற்றி, பள்ளிகளுக்கு கொண்டு வந்து இறக்குவது போல், பாடப் புத்தகங்களையும் வினியோகித்தால், கல்விப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும். அதையும் பாடநுால் கழகம் முறையாகச் செய்யாமல் அலட்சியம் காட்டுகிறது' என்றனர்.இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புத்தகம் அச்சிட்டு வழங்க மட்டுமே அரசு நிதி ஒதுக்குகிறது; அதை வாகனங்களில் ஏற்றிச் செல்ல நிதி வழங்கவில்லை. 'ஸ்டாக்' இருக்கும் போது எடுத்துக் கொள்ள வேண்டியது தான்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி