மலை கிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடர் பற்றாக்குறை! மாணவர்களின் கல்வி தரம் கேள்விக்குறி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2015

மலை கிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடர் பற்றாக்குறை! மாணவர்களின் கல்வி தரம் கேள்விக்குறி

அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் தாளவாடி, ஆசனூர், கடம்பூர், பர்கூர் மலைகிராமங்களில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படும், 18 அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகள் செயல்படுகின்றன. மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வியை பெறும் நோக்கில், அரசால் உண்டு உறைவிட பள்ளிகள் துவங்கப்பட்டன.
இதுகுறித்து, சத்தியமங்கலம் சுடர் அமைப்பை சேர்ந்த நடராஜன் கூறியதாவது: பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 75 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில், 30 பணியிடங்கள், 2010ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன. இதனால் மலைப்பகு பழங்குடி குழந்தைகளின் கல்வி நிலை, கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மலை பகுதியில் கல்வி அறிவு, 54 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையே, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசிடம் உத்தரவு பெற்று, காலி பணியிடங்களை நிரப்ப, கால அவகாசம் அதிகரிக்கும். எனவே, தற்காலிக தீர்வாக, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். 2010ம் ஆண்டு முதல், ஓராண்டுக்கு தற்காலிக ஆசிரியர்கள், எட்டு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர்.
மாணவர்கள் நலன் கருதி, மீண்டும் ஆசிரியர் பணியிட நியமனத்துக்கு உத்தரவிட வேண்டும். மலைப்பகுதியில் வசிக்கும், ஆசிரியராக பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு மாதம், 3,000 ரூபாய் வழங்குவோம். தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களை ஸ்பான்சர் பிடித்து தான், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியும்.தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு பள்ளிகளிலும் கூட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்ய பிரைவேட் கிளாஸ், ட்யூஷன், இரவு வகுப்புகள் நடத்தப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி., பாடங்கள், 9ம் வகுப்பிலேயே நடத்தப்படுகிறது.
உதாரணமாக, கொங்காடை அரசு நடுநிலை பள்ளியில், 174 மாணவ, மாணவியர் உள்ளனர். ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். எட்டு வகுப்புகளுக்கும், எவ்வாறு அவரால் தினமும் பாடங்களை எடுக்க முடியும். மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேறாமல் பார்த்து கொள்ள செய்வதற்கே, நேரம் சரியாகிவிடும்.வழக்கு, உயர் அதிகாரிகள் நடவடிக்கை என பல்வேறு காரணங்களை கூறி, அதிகாரிகள் இப்பிரச்னையை, அவ்வப்போது சமாளித்து, காலத்தை கடத்துகின்றனர். தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்து, கோப்புகளை பார்த்து நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், எப்போது நடவடிக்கை எடுப்பார்கள் என்பது, கேள்விக்குறியாக உள்ளது. கலெக்டரிடம் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற, பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை.
புதிதாக நியமனம் பெறுவோரும் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே அரசியல் செல்வாக்கு, பண பலம் மூலம், பொது கவுன்சிலிங்கில் பணியிட மாறுதல் பெற்று சென்று விடும் நிலை தொடர்கிறது.இதனால் மலைப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி