தண்டிக்கவும் உரிமை வேண்டும்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2015

தண்டிக்கவும் உரிமை வேண்டும்...

பண்டைய காலத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியாவின் குருகுலக் கல்வி முறை இருந்துள்ளது. குருகுலக் கல்வி முறையில் குருவுக்கு (ஆசிரியருக்கு) பணிவிடை செய்வதே மாணவரின் முதல் கல்வியாக அமைந்திருந்தது.இந்தியாவில் மெக்காலே கல்வி முறை அறிமுகமான பின் ஆசிரியர் - மாணவர் உறவு முறை தலைகீழானது.
பண்டைய கல்வி முறையில் ஒழுக்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இப்போது,
உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு, ஆசிரியர்கள் நியமனம் என அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் தரம் அதிகரித்துவந்தாலும், ஒரு சில மாணவர்களின் ஒழுக்கம் குறைந்து வருகிறது கவலை அளிப்பதாக உள்ளது.கல்வி, விளையாட்டு, பொது அறிவு என கல்வி சார்ந்த விஷயங்களில் மாணவர்கள் பலர் முன்னணியில் இருக்கின்றனர். இருப்பினும், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம், பணிக்குச் செல்லும் பெற்றோர்களால் தங்களது குழந்தைகளை கவனிக்க முடியாத நிலைமை, தவறான சகவாசம் காரணமாக தவறு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.1996-ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் பொன். நாவரசு விடுதியில் கொலை செய்யப்பட்டார். இதேபோல், 2012-ஆம் ஆண்டில் சென்னை பள்ளி ஒன்றில் ஆசிரியை உமா மகேஸ்வரி மாணவனால் வகுப்பறையிலேயே கொலை செய்யப்பட்டார்.2014-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாலிடெக்னிக் ஆசிரியர் சுப்பிரமணியன், 20-க்கும் மேற்பட்ட மாணவர்களால் கொலை செய்யப்பட்டார்.சென்னையில் ஒரு பள்ளியில் மாணவரைக் கண்டித்ததற்காக ஆள்வைத்து ஆசிரியரைத் தாக்கியதாக மாணவரின் தந்தையும், வேறு சிலரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதுபோன்று ஏராளமான சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை தவறுகளையும், குறும்புகளையும், சேட்டைகளையும் செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கும் விதம் கண்ணீரை வரவழைக்கும்.
மாணவனின் காதுகளைப் பிடித்து திருகுதல், தோப்புக் கரணம், வெயிலில் நிற்க வைத்தல், பிரம்பால் அடித்தல், கடும் வெயிலில் மைதானத்தை பல முறை வலம் வரச் செய்தல், கடும் வெயிலில் முட்டிப் போடவைத்தல் என தண்டனைகளின் பட்டியல்கள் தொடரும்! பிரம்பைத் தூக்கிக் கொண்டு திரியும் ஆசிரியரைப் பார்த்தால் மாணவர்களின் உடல் நடுங்கும். மாணவர்களைத் தண்டிக்கும் ஆசிரியருக்கு ஆதரவாகவே பெற்றோரும் இருந்தனர். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ்.மாணவர்கள் தவறுகள் செய்வதை அறிந்தாலும், அவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதும் இல்லை; தண்டிப்பதும் இல்லை. தவறு செய்யும் மாணவனுக்கு கிடைக்கும் அதிகபட்சத் தண்டனை ஆசிரியரின் அறிவுரைதான்.
இதைவிட கடுமையாகத் தண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கியுள்ள பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டங்களும், கல்வித் துறை பிறப்பித்துள்ள உத்தரவுகளும்தான் மாணவர்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்டதாக மாணவன் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாகப்பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார்; காவல் துறையின் தண்டனைக்கும் ஆளாவது உண்டு.இதனால், பல ஆசிரியர்களும் வகுப்பில் பாடம் நடத்துதல் மட்டுமே தமது பணி என்ற அளவில் தங்கள் செயல்பாடுகளை சுருக்கிக் கொண்டுவிடுகின்றனர். இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் அவர்களைக் குறைகூறியும் பயனில்லை.
மாணவர்களிடம் அன்புடனும், கனிவுடனும் நடக்க வேண்டும் என்பதுதான் பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கூறும் அன்பான வேண்டுகோள்.தனியார் பள்ளிகளில் தவறு செய்யும் மாணவரை பள்ளியில் இருந்து உடனடியாக வெளியேற்றுகின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவரை உடனடியாக வெளியேற்ற முடிவதில்லை.ஜாதி, மதம், இனம், மொழி, அரசியல் என்ற பல வகையான நெருக்கடிகளுக்கு தலைமை ஆசிரியர் ஆளாக வேண்டிய சூழ்நிலை.
இதனால், தவறு செய்யும் மாணவனைத் தட்டிக் கேட்க முடியவில்லை.இத்தகைய சூழலில், தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களையும், சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களையும் கண்டறிந்து தகுந்த உளவியல் ஆலோசனைகளை வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குற்றவாளியைத் தண்டிக்கும் உரிமை காவல் துறைக்கு உண்டு. இதேபோல், தவறு செய்யும்மாணவனைத் தண்டிக்கும் உரிமையை ஆசிரியருக்கு அரசு தர வேண்டும்.
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.அதேநேரத்தில், இதைத் தவறாகப் பயன்படுத்தும் ஆசிரியருக்குக் கடுமையான தண்டனை கொடுப்போம் என்று உறுதியையும் அரசு அறிவிக்க வேண்டும்.மாதா, பிதா, குரு, தெய்வம். இதில் பெற்றோருக்கு அடுத்தபடியாகவும், தெய்வத்துக்கு முன்னதாகவும் குரு என்று ஆசிரியரைத்தான் முன்னிறுத்துகிறோம். இப்போது குருவுக்கு பெயரளவுக்குதான் மரியாதை உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது."இன்றைய மாணவன். நாளைய தலைவன்' என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் கைகளுக்கு கட்டுப் போட்டிருப்பதை தமிழக அரசு நீக்க வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் "வளமான, வலிமையான பாரதம், தலைசிறந்த தமிழகம்' உருவாகும்.

2 comments:

  1. Replies
    1. nalla seithigal tamilagathil edupadathu nanmba asiriya samuthayathai odukki taniyar pallikalai ukkuvikkum nadavadikkai ithu

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி