மழலையர் முன்பருவப் பள்ளி; ஒன்றரை வயதான குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும்: வரைவு வழிகாட்டுதல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2015

மழலையர் முன்பருவப் பள்ளி; ஒன்றரை வயதான குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும்: வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான (பிளே ஸ்கூல்) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றரை வயது நிறைவு செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation  என்ற இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் முன்பருவப் பள்ளிகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை- வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் தொடுத்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிமன்றம், மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது. "நீதிமன்றம் பல தடவை உத்தரவிட்ட பிறகும், அந்த விதிமுறைகளை வகுத்து அவற்றை இறுதி செய்வதில் அரசுத் தரப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.அடுத்த விசாரணைக்குள் (6 வாரத்துக்குள்) இந்த விதிமுறைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என்று கூறி, வழக்கு விசாரணையை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவைத் தொடர்ந்து, மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள், தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் முன்பருவப் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்.இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அங்கீகாரம் புதுப்பிப்பு வழங்கும் அதிகாரம் மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலருக்கு வழங்கப்படுகிறது.அவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளிக் கட்டடம்:
பள்ளிக் கட்டடமானது சொந்தக் கட்டடமாகவோ அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டடமாகவோ இருக்க வேண்டும்.மேலும், கான்கிரீட் கட்டடமாகவும், இரும்பு முள்வேலியால் சூழப்படாததாகவும் இருக்க வேண்டும்.அத்துடன் ஒரு குழந்தைக்கு 10 சதுர அடி என்ற அளவில் வகுப்பறை இடப் பரப்பு அமைந்திருக்க வேண்டும். வகுப்பறைகள் இரண்டு நுழைவு வாயில்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மழலையர் முன்பருவப் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைக்கு ஜூலை 31-இல் ஒன்றரை வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இந்த வயது உச்சவரம்பில் சலுகை அளிக்கப்படக் கூடாது.மேலும் ஒரு வகுப்பறைக்கு 15 குழந்தைகள் என்ற அளவில் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் இந்தப் பள்ளிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும்.பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களின் குழந்தைகள்மட்டுமே பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.
ஆசிரியர் தகுதி:
இந்தப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேர்க்கப்படுபவர்கள், பிளஸ் 2 முடித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.அல்லது மனை அறிவியலில் பட்டப் படிப்பு அல்லது பி.எட். அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருத்தல் அவசியம்.இந்தப் பள்ளிகளில் குழந்தைகள் கண்டிக்கப்படக் கூடாது, தினமும் 3 மணி நேரத்துக்கு மேல் பள்ளிகள் இயங்கக் கூடாது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு பள்ளி மூடப்பட்டு விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த வரைவு வழிகாட்டுதலில் விதிக்கப்பட்டுள்ளன.
கருத்துகளை அனுப்பலாம்...
மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation  என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை வருகிற 22-ஆம் தேதிக்குள்"இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006' என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி