அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது: அன்புமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2015

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது: அன்புமணி

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் நியமனம் நேர்முகத் தேர்வில் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைக்கு மாறானது. இது கடும் கண்டனத்துக்குரியது.தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளிலும், மேல்நிலைப்பள்ளிகளிலும் 4362 ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.

இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, அதன்பின் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்தப்படும் என்றும், நேர்காணலில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம்மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நேற்று பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் ஆய்வக உதவியாளர் பணி நியமனம் செய்யப்படும் என்றும், இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.பொதுவாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட குடிமையியல் பணிகளுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-1, தொகுதி-2 பணிகளுக்கும் மட்டும் தான் எழுத்துத் தேர்வும் நேர்காணலும் நடத்தப்படும். தொகுதி-3, தொகுதி-4 பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மூலமாகவே ஆட்கள் நியமிக்கப்படுகின்றார்கள்.
ஆய்வக உதவியாளர் பணி என்பது தொகுதி-4 பணிகளில் வரும் இளநிலை உதவியாளர் நிலைக்கு சமமானது தான். இளநிலை உதவியாளர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கப் படும் நிலையில், ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி, அதிலுள்ள மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல், நேர்முகத் தேர்வு நடத்தில் அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படும் என்பது இதுவரை எங்குமே கேள்விப்படாத நடைமுறையாகும்.கடந்த காலங்களில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படிதான் நிரப்பப்பட்டு வந்திருக்கின்றன. பொது அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெற்று தான் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் எழுத்துத் தேர்வின் மூலம் ஆய்வக உதவியாளர்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தமிழக அரசு கடைப்பிடிக்கும்புதிய முறை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

இது நேர்மையான நியமனங்களுக்கு வழி வகுக்காது.பொதுவாகவே நேர்காணல்களில் தான் முறைகேடுகள் செய்யப்படுகின்றன என்ற அவநம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு மாணவரின் திறமையை மதிப்பிடுவதற்கான தெளிவான வரையரைகள் எழுத்துத் தேர்வில் தான் உள்ளன. அவ்வாறு இருக்கும் போது நேர்காணலின் மூலம் பணி நியமனம் செய்வது ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மட்டுமே வழி வகுக்கும். எனவே, ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆய்வக உதவியாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி