சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2015

சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை

சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.மதுரை வழக்குரைஞர் பி.அசோக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

மனுவின் விவரம்:


சட்டப் படிப்பின் தரத்தை உயர்த்த, தேசிய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு 2002-இல் அறிக்கை அளித்தது. அதைத் தொடர்ந்து 2008-இல் சட்டப் படிப்புக்கான விதிகளை இந்திய பார் கவுன்சில் வரையறை செய்தது. அதன்படி, இந்தியஅளவில் முதன்முறையாக சட்டப் படிப்புக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது வரம்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 3 நபர்கள் குழுவும் சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு பரிந்துரை செய்தது.இந்நிலையில், சட்டப் படிப்புக்கு வயது வரம்பு தொடர்பான விதியை மறுபரிசீலனை செய்ய வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன் தலைமையில் ஒரு நபர் குழுவை பார் கவுன்சில் அமைத்தது. இக் குழு சட்டப் படிப்புக்கான வயது வரம்பை அறவே நீக்கிவிடுமாறு 2013-இல் பரிந்துரை செய்தது. இதையடுத்து சட்டக் கல்விக்கான வயது வரம்பைஇந்திய பார் கவுன்சில் 2013 செப்டம்பர் 28-இல் தளர்த்தியது. இந்நிலையில், தமிழகத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு கிடையாது. 5 ஆண்டு சட்டப்படிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு கிடையாது. மற்றவர்களுக்கு 21 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உச்சநீதிமன்றத்தில் 3 நபர் குழுத் தாக்கல் செய்த பரிந்துரைக்கு எதிரானதாகும். எனவே டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவர் சேர்க்கையில் வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.மத்திய சட்டத் துறைச் செயலர், இந்திய பார் கவுன்சில் செயலர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், பல்கலைக்கழக மானியக் குழு செயலர்,டாக்டர் அம்பேக்தர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி