தட்டச்சு தேர்வு முடிவு வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம்:தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் மீது புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2015

தட்டச்சு தேர்வு முடிவு வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம்:தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் மீது புகார்

'தமிழகத்தில், பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வு, மறு கூட்டல் முடிவு வெளியாவதில் காலதாமதம், வணிகவியல் பள்ளிகள் ஆசிரியர் பயிற்சி மையம் அமைவதில் முறைகேடு நடந்துள்ளது' என, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
           தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரவிச்சந்திரன், செயலர் இளங்கோவன் மற்றும் பொருளாளர் தாஸ் ஆகியோர் கூறியதாவது:தமிழகத்தில், ஆண்டுதோறும் தட்டச்சு பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
நடப்பாண்டு, பிப்ரவரி மாதம், 81 ஆயிரம் பேர், தட்டச்சு தேர்வு எழுதினர்.டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பகுதி நேர மற்றும் முழுநேர வேலை வாய்ப்பு அதிக அளவில் கிடைக்கிறது.
ஆனால், சமீப காலமாக தட்டச்சு தேர்வு நடத்தும் தொழில் கல்வி இயக்ககம், பல்வேறு வகையில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி, 21 மற்றும், 22ம் தேதியில் நடந்த தேர்வுக்கு, ஏப்ரல், 10ம் தேதியே தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்க வேண்டும்; ஆனால், வெளியிடவில்லை.
அறிவுறுத்தல்:அப்போது, தொழில் நுட்ப கல்வி இயக்கக கமிஷனராக இருந்த, முன்னாள் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முயற்சியால், 77 நாட்களுக்கு பின், மே, 11ம் தேதி, தொழில் கல்வி இயக்ககம் தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர் பட்டியலையும் வெளியிட்டது.கடந்த மூன்று தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, 'மெரிட்' சான்றிதழ் வழங்க, பிரவீன்குமார் அறிவுறுத்தினார். ஆனால் இதுவரை, 'மெரிட்' சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், குரூப் - 4 தேர்வு எழுதுபவர்கள் பாதிக்கப்படுவர்.

மேலும், பிப்ரவரி மாதம் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்கள், மறு கூட்டலுக்கு, மே, 20ம் தேதிக்குள் விண்ணப்பித்தனர். ஆனால், இன்று வரை முடிவு வெளிவரவில்லை. இதனிடையே, 2015 ஆகஸ்ட் மாத தேர்வுக்கான விண்ணப்ப தேதியை அறிவித்துள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, நாளொன்றுக்கு, 50 தாள்களுக்கு பதிலாக, 150 தாள் வழங்கி நிர்ப்பந்தம் செய்துள்ளனர். இதை, பிரவீன்குமார் பார்வைக்கு கொண்டு சென்றதை அடுத்து, மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டார்.
ஆனால், நான்கு மையங்களில், தலா, ஏழு ஆசிரியர்களை நியமித்து, 1.20 லட்சம் விடைத் தாள்களில், 3,000 விடைத்தாள்களை மட்டும் சரிபார்த்து, பல வேறுபாடுகளை மறைத்து, அறிக்கை வழங்கி விட்டனர். குறிப்பாக, கோயம்புத்துார் மையத்தில், மறு மதிப்பீடு செய்வதற்கு முன்பே இயக்ககத்தின் வட்டார அலுவலர் நிலை- - 2, வேங்கட வரதன் உத்தரவுப்படி, வேறுபாடு இல்லை என, கையெழுத்து வாங்கி விட்டனர்.
இதுகுறித்து பிரச்னை எழுந்ததும், விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரியை அழைத்து, கையெழுத்திட்ட கடிதங்களை திரும்ப பெற்றனர். இதனால், பிப்ரவரி மாதம் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதிலும், மறு மதிப்பீடு முடிவு வெளியாவதிலும் தாமதமாகிறது.
இந்நிலையில், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் வணிகவியல் பள்ளிகளின் ஆசிரியர் பயிற்சியில், வட்டார அலுவலர் வேங்கட வரதன் தலையீட்டால், பிரச்னை எழுந்துள்ளது.
தொழில் கல்வி இயக்கக அறிவிப்பில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய இடங்களில், ஆசிரியர் பயிற்சி நடைபெறும் என அறிவித்து, அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்காமல், சென்னை, சேலம், மதுரை மற்றும் ராஜபாளையம் ஆகிய இடங்களில் பயிற்சியை துவங்கி உள்ளனர்.
திருச்சியில், 45க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற விண்ணப்பித்து இருந்த போதிலும், 35 பேர் மட்டும் விண்ணப்பித்த ராஜபாளையத்தில், பயிற்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி சீட்டு :கடந்த, 8ம் தேதி துவங்கிய பயிற்சிக்கு, எந்தவித முன் அறிவிப்பும் செய்யாமல், ஜூன், 3ம் தேதி மாலை தான், இன்டர்நெட்டில் தகவல் வெளியிட்டனர். பயிற்சியில் சேருபவர்களுக்கான அனுமதி சீட்டை சாதாரண தபாலிலும், பயிற்சி வழங்கும் வல்லுனர்களுக்கு, ஜூன், 6ம் தேதி பணி நியமன ஆணையும் அனுப்பியுள்ளனர்.திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் ஆகிய, எட்டு மாவட்டங்களை உள்ளடக்கி, திருச்சியில் உடனடியாக பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
இதுகுறித்து, உயர் கல்வித் துறை இணைச் செயலரான அபூர்வாவுக்கு, கடந்த, 3 மற்றும், 4ம் தேதிகளில் கடிதம் எழுதியும், இன்று வரை பதில் இல்லை. தேர்வு முடிவுகளை வெளியிட்டு, சான்றிதழ் வழங்கவும், கோவை, திருச்சியில் பயிற்சி மையம் அமைக்க அனுமதி வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவிர, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில், பயிற்சி வல்லுனர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதோடு, சங்கத்தின் சார்பில் போராட்டமும் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி