திறன் மேம்பாட்டு பயிற்சி மையத் திட்டம்: 5 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 18.70 கோடி நிதியுதவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2015

திறன் மேம்பாட்டு பயிற்சி மையத் திட்டம்: 5 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 18.70 கோடி நிதியுதவி

பல்கலைக்கழக மானியக் குழுவின் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய (தீனதயாள் உபாத்யாய கௌஷல் மையங்கள்) திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த5 கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 18.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.


திறன் மிக்க, பயிற்சி பெற்ற மனித ஆற்றலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்த இந்தத் திட்டம் 2015-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்திருந்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளை யுஜிசி வரவேற்றிருந்தது. இந்தத் திட்டத்துக்காக யுஜிசி ரூ. 500 கோடி நிதி ஒதுக்கியது. இதற்கு விண்ணப்பிக்கும் மையங்கள் ஏதாவது ஒரு தொழில் நிறுவனத்துடன் கூட்டுவைத்திருக்க வேண்டும். யுஜிசி-யின் 12(பி) விதியின் கீழ் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவியும் இதற்காக வழங்கப்படும்.சுயநிதி கல்வி நிறுவனங்களும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் நிதியுதவி கிடைக்காது என்றும் யுஜிசி அறிவித்திருந்தது.இந்தத் திட்டத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் அனுப்பப்பட்டன.இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள், தேர்வு செய்யப்படாத கல்வி நிறுவனங்களின் பட்டியலை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு, 3 பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரிக்கு 3 பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 4.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்துக்கு இரண்டு பயிற்சி திட்டங்களை நடத்துவதற்கு ரூ. 3.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு 3 பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கென இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரிக்கு 2 பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கென ரூ. 3.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இவை தவிர சுயநிதி அடிப்படையில் கோவை என்ஜிபி கலை, அறிவியல் கல்லூரி, எஸ்என்எஸ் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, மதுரை கேஎல்என் தகவல் தொழில்நுட்ப கல்லூரி, காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா, தூத்துக்குடி வி.ஒ.சிதம்பரம்கல்லூரி ஆகியவையும் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தேர்வு செய்யப்படாத கல்வி நிறுவனங்கள்: கோவை பாரதியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்திலிருந்து பரிந்துரைகளை அனுப்பிய 55 கல்வி நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி