ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு: பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2015

ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு: பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு

காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிகளில் கட்டாய நீதிபோதனை வகுப்பு இருந்தது. இந்த வகுப்பில் மாணவர்களுக்கு அரிய பல விஷயங்களையும்,
நல்லொழுக்கம் தொடர்பான நீதிக் கதைகளும்பாடமாக நடத்தப்பட்டு வந்தன. இதுபோன்ற நீதிபோதனை வகுப்புகள் ஒரு மாணவரை நல்ல பழக்க வழக்கங்களுக்கு இழுத்துச் சென்றன. காலப்போக்கில் இந்தக் கல்வித் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.பள்ளிகள் தொழிற்சாலையாகவும், மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரமாகவும் மாற்றப்பட்டனர். 100 சதவீதம் தேர்ச்சி என்ற ஒரே குறிக்கோளுக்காக மட்டுமே இப்போது பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்காமல், எதிர்வினையை ஏற்படுத்தி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு பக்கம், ஆசிரியர்களின் கை மாணவர்கள் மீது படக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டு, ஆசிரியர்களின் கைகளை கட்டிப் போட்டு விட்டனர். இதன் விளைவு இன்று மாணவர்கள் தாம் செல்லும்பாதை சரியா தவறா என்றுகூட பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், வாய்க்கு வந்தபடி பேசுவதும், பள்ளிகளுக்குச் செல்வதாகக் கூறி திரையரங்குகளுக்குச் செல்வதும் என்று மாணவர்களின் மன நிலை தலைகீழாக மாறிவிட்டது. காஞ்சிபுரத்தில் புதன்கிழமை மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சக மாணவர்களால், ஒரு மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

நீதிபோதனை:

மாணவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், அதற்கு நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தான் கல்வி ஆர்வலர்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நீதி போதனை வகுப்புகளை நடத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், பயிற்சி நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:நீதிக் கதைகள் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இதனால் "கேளு பாப்பா கதை கேளு' இயக்கம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீதி போதனை வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளோம். தினமும் காலை பள்ளி முதல் வகுப்பு தொடங்கும் முன்பும், மாலை பள்ளி வேளை முடியும் முன்னரும் கட்டாயம் நீதிபோதனை வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு வலியுறுத்தப்பட உள்ளது.இதில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நீதியை போதிக்கும் வகையிலான கதைகளைக் கூற வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர்கள் கூறும் கதைகளை மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று அதை பெற்றோர்களுக்குக் கூற வேண்டும். மேலும், பெற்றோர்களிடம் இருந்து புதிய நீதிக் கதைகளைத் தெரிந்து கொண்டு, அதை மறுநாள் பள்ளிக்கு வரும்போது சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இதன் மூலம் மாணவர்களுக்கு புத்தகப் படிப்பைத் தவிர பொது அறிவு வளர்வதுடன், நீதிக் கதைகள் கூறுவதன் மூலம் மாணவர்கள் நல்ல நிலைக்கு வர வாய்ப்பு உள்ளது. இதை விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி