மதுரை: அரசு பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2015

மதுரை: அரசு பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள் சேர்க்கை


கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு கல்வியாண்டில் மதுரையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் 648 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 207 நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு தொடக்கப்பள்ளி, 8 நகராட்சி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை காட்டிலும் 1,834 பேர் வரை குறைந்துள்ளது.


மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதல் மற்றும் 6-ம் வகுப்புகளில் இந்த ஆண்டு நடைபெற்றுள்ள மாணவ, மாணவியர் சேர்க்கை விவரம்: அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை பொருத்தவரையில், முதல் வகுப்பில் மாணவர்கள் 5,309 பேரும், மாணவிகள் 5,315 பேரும் என மொத்தம் 10,624 பேர் சேர்ந்துள்ளனர். ஆறாம் வகுப்பில் 2,452 மாணவர்களும், 2,575 மாணவிகளும் என மொத்தம் 5,027 பேர் சேர்ந்துள்ளனர். ஆங்கிலவழிக் கல்வியை பொருத்தவரையில் முதல் வகுப்பில் மாணவர்கள் 3,123 பேரும், மாணவிகள் 3,146 பேரும் என மொத்தம் 6,269 பேர் சேர்ந்துள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் தமிழ்வழிக் கல்வி முதல் வகுப்பில் மாணவர்கள் 6,637 பேரும், மாணவிகள் 6,767 பேரும் என மொத்தம் 13,404 பேர் சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் மாணவர்கள் 2,882 பேரும், மாணவிகள் 3,101 பேரும் என மொத்தம் 5,983 பேர் சேர்ந்துள்ளனர். ஆறாம் வகுப்பில் மாணவர்கள் 2,180 பேரும், மாணவிகள் 2,187 பேரும் என மொத்தம் 4,367 பேர் சேர்ந்துள்ளனர். இதன்படி, கடந்த கல்வியா ண்டில் 23,754 ஆக இருந்த சேர்க்கையானது, இந்த கல்வியாண்டில் 21,920 பேர் ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 1,834 ஆக எண்ணிக்கை குறைந்துள்ளது. இதேபோல தொடர்ச்சியாக மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வந்தால் அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் எனக் கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலர் முருகன் கூறியது: தனியார் பள்ளிகளை அரசு ஊக்குவித்து வருவதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. பெற்றோர்களின் ஆங்கில மோகம் உள்ளிட்ட காரணங்களாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது.

முன்பு மாணவர்கள் எண்ணிக் கையை காரணம் காட்டி, ஆசிரியர் எண்ணிக்கையை அரசு குறைத்தது. தற்போது போதிய ஆசிரியர் இல்லாத காரணத்தால், பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே படிக்கும் நிலை ஏற்பட்டு 50% அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாகி விடும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே, புதிதாக தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொ) பார்த்தசாரதி கூறியது: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகத்தான் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி