பொறியியல் படிப்பின் எதிர்காலம் என்ன ஆகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2015

பொறியியல் படிப்பின் எதிர்காலம் என்ன ஆகும்?

தமிழகத்தில், 536 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு நடந்த கலந்தாய்வுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் கீழ் உள்ள இடங்களில் காலி ஏதும் இல்லை; இடங்கள் நிரம்பி விட்டன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கல்வி பயில பல்வேறு கல்விப் பிரிவுகளில் இடம் இருந்தபோதும், 94,500 இடங்கள் நிரம்பவில்லை.


இவ்வாறு நிரம்பாத கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என்பது, சேர்க்கை முடிவில் தெரியவந்திருக்கிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், மெக்கானிக்கல் பிரிவுக்கு கிராக்கி அதிகம் இருந்தது. இப்பிரிவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராக்கி உள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பொறியியல் படிப்பில் ஆர்வம் குறைந்திருப்பதும், பெண்களின் ஆர்வம் குறைந்திருப்பதும் நன்றாக தெரிகிறது.கணினி படிப்புக்கு முக்கியத்துவம் குறைந்ததும், இதில் கவனிக்கத்தக்கது. தவிரவும், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை, 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.
இவைகளைப் பார்க்கும்போது, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளை, எந்த முறையில் திறன்அறி கல்வியாக மாற்ற வேண்டும் என்ற கேள்விஎழுகிறது.வேலைவாய்ப்பு, படித்து முடித்தபின் கிடைக்கும் வேலையின் நிரந்தரம், கிடைக்கும் சம்பளம் ஆகிய பல அம்சங்களை பெற்றோரும் மாணவ, மாணவியரும் முன் கூட்டியே எடை போடத் துவங்கியதன், அடையாளமாக இந்த பின்னடைவைக் கருதலாம்.மேலும், 'இன்போசிஸ், விப்ரோ' உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு ஆள் எடுப்பதில், பல அணுகுமுறைகளை மாற்றிஉள்ளன. தகுதி, திறன் ஆகியவற்றை அலசி ஆய்ந்து எடுக்கும் முறைகளில் தேர்வு செய்யப்படுவோருக்கு, அந்த நிறுவனங்கள் அளிக்கும் பயிற்சிகளும் ஏராளம். அதே போல, கம்பெனியில் குறைந்த காலம் பணியாற்றி, சம்பளம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக, பணி மாறுவோர் எண்ணிக்கை குறைய, அவை முன்வந்திருப்பது நல்லது.மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளை படித்தவர்கள் தாங்கள் படிப்புடன் தொடர்பு உடைய வேலை என்பதை விட வங்கிகள், அரசுத்துறை வேலைக்கும் விண்ணப்பிக்க முன்வந்திருக்கின்றனர்.
பொறியியல் பட்டங்களில் உள்ள பலதுறைகளில் படிக்கும் மாணவ, மாணவியரை கம்பெனிகள் இணைத்துக் கொண்டு, பணியின் அனுபவத்தை கற்றுத்தருவது என்ற அணுகுமுறை முற்றிலும் நடைமுறையாகுமா என்பது தெரியவில்லை. அப்படியே அக்கம்பெனிகளில் பணித்திறன் பெற்றாலும், அதற்குப்பின் சில ஆண்டுகளில் ஒப்பந்த பத்திரம் எழுதித்தந்து வேலை பார்க்க வேண்டியதும் வரலாம்.அதைவிட, பி.ஆர்க்., படிப்பு போன்ற தொழில் சம்பந்தமான படிப்பு படித்தாலும், வேலை கிடைப்பதில்லை. இது தமிழகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் எழுந்திருக்கும் பிரச்னையாகும்.அகில இந்திய தொழில் நுட்பக்குழு தகவல்படி, நாடு முழுவதும் உள்ள, 16.5 லட்சம் பொறியியல் படிப்பு இடங்களில், 8.45 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

இவற்றைப் பார்க்கும்போது, பொறியியல் படிப்பு, பட்டம் பெற்றபின் கிடைக்கும் வேலை, படிப்பு தொடர்பான பணி, குறைந்தபட்ச சம்பளம் ஆகியவை குறித்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரும் முறையாக, முன்கூட்டியே ஆலோசனை பெறாவிட்டால், இந்த நிலை மேலும் மோசமாகலாம்.பொறியியல் பட்டதாரிகள்மற்ற அறிவியல், கலை பட்டதாரிகளை போல, கிடைக்கும் பணிகளை ஏற்று, அதற்குப்பின் தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டு, போட்டி களத்தில் இருக்கும் அவலநிலை அதிகரிக்கக் கூடாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி