அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்அதிகரிப்பு:பணி நிரவலை நோக்கி காலம் கடத்தும் நிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2015

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்அதிகரிப்பு:பணி நிரவலை நோக்கி காலம் கடத்தும் நிலை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் ரூ.பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 60 மாணவர்கள் இருந்தால் 2 ஆசிரியர், 61 முதல் 90 வரை மூன்று, 91 முதல் 120 வரை 4 பணியிடம், 121 முதல் 200 வரை 5 பணியிடமும், அதன்பிறகு ஒவ்வொரு 50 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் பணியிடம் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
நடுநிலை பள்ளிகளை பொறுத்தவரை இதே நடைமுறை தான் என்றாலும், அறிவியல் மற்றும் கணிதம், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு 35 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஆசிரியர் நியமிக்கப் பட்டு வருகின்றனர். 100 மாணவர்கள் வரை மூன்று தனிப் பாட ஆசிரியரும் அதற்கு மேல் 35 மாணவருக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக பணியமர்த்தலாம். உதவி பெறும் பள்ளிகளிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப் படுகிறது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதனால் ஆசிரியர் பணியிடம் உபரி அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு பள்ளியில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர் அதிகம் இருக்கும் பள்ளிக்கு ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் மாற்றப் படுகின்றனர். ஆனால், உதவி பெறும் பள்ளிகளுக் கிடையேயான பணி நிரவல் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுக்கும் மேல் நடத்தப் படவில்லை.
இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், காரைக்குடியில் உள்ள ஒரு உதவி பெறும் பள்ளியில் மட்டும் 12 உபரி பணியிடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கு உபரி சம்பளமாக மாதந்தோறும் ரூ.ஒரு லட்சத்து 93 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் உபரி சம்பளமாக மாதந்தோறும் லட்சக்கணக்கில் வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உபரியாக உள்ள 256 பணி யிடங்களுக்கு 43 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது, என தெரிய வந்துள்ளது. இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை உபரி சம்பளம் வழங்கப் பட்டு வருகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறும்போது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆசிரியர்கள் அப்படியே உள்ளனர்.
மாணவர்கள் இன்றி சும்மாவே காலம் கடத்தும் நிலை உள்ளது. ஏழு ஆண்டுக்கும் மேலாக சிவகங்கை மாவட்டத்தில் பணி நிரவல் இல்லை. உதவி பெறும் பள்ளிகளில் காலியாகும் இடங்கள் உபரியாக இருந்தாலும் பணி நியமனம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்யலாம், என்றார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி