உடல் சார்ந்த விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2015

உடல் சார்ந்த விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த உத்தரவு

வளர் இளம் பருவத்தினருக்கு உடல், மனம் சார்ந்த மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்செயல்படுத்தப்பட்டு வரும் 5,748 உயர்நிலைப் பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளிகளில் 9,10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்காக குமரப்பருவ மன்றம், கலை, பண்பாடு இலக்கிய மன்றம், விழிப்புணர்வு மன்றம் ஆகிய மன்றங்களை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவற்றைத் தொடங்க அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு ரூ.10 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அடுத்த கல்வியாண்டில், இந்தப் புதிய திட்டத்தைத் செயல்படுத்துவதற்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் நிதி மத்திய அரசிடம் இருந்து கோரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்:


குமரப்பருவ மன்றம்:


10 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் வளர் இளம்பருவத்தினராக கருதப்படுவர். இவர்களுக்கு உடலியல், உளவியல் சார்ந்த பல்வேறு வளர்ச்சியும், பிரச்னைகளும் இயல்பாகவே அமைவதுண்டு. எனவே, இவர்களது உடல், மனநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகுந்த வழிகாட்டுதலும் தேவைப்படும்.தகுதிவாய்ந்த உளவியல், மருத்துவ நிபுணர்களைப் பள்ளிக்கு அழைத்து தகுந்த ஆலோசனைகளை வழங்கச் செய்தல், பாலுணர்வு தொடர்பான இயல்பான உடல்நிலை, மனநிலை மாற்றங்கள் குறித்த அறிவினை வழங்குதல் ஆகிய பணிகளை இந்த மன்றங்களின் மூலம் மேற்கொள்ளலாம்.ஒத்த வயதுள்ளவர்களைத் தங்களுடைய பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசிப் பகிர்ந்துகொள்ளச் செய்தல், அந்தப் பிரச்னைகளுக்கு ஆசிரியர்கள் மூலம் தீர்வுகள் வழங்கச் செய்தல், எந்த வகையான செயல்பாடுகள்வன்கொடுமையாகும் என்ற விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்தலாம். மாணவியர்களிடம் சரியான தொடுதல், தவறான தொடுதல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உளவியல், உடலியல் மாற்றங்கள் குறித்த நூல்கள், கட்டுரைகளை வாங்கிப் படிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றிய கருத்துரைகளை அறியச் செய்தல், மேலும் கட்டுரை, கதை, கவிதைப் போட்டிகளை நடத்தி, வென்றவர்களுக்குப் பரிசுகளை வழங்குதல் போன்றவற்றையும் இந்த மன்றங்கள் மூலம் செய்ய வேண்டும்.


கலை, இலக்கிய மன்றங்கள்:


கலை இலக்கிய மன்றங்களின் மூலம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகள், கவியரங்கம், பட்டிமன்றம், பொழிவரங்கம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த மன்றங்களின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, குடியரசு தின விழா, ஆசிரியர்கள் தினம் போன்றவற்றை இந்த மன்ற உறுப்பினர்களை முன்னின்று நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கலை விழாக்களையும் நடத்த வேண்டும்.


விழிப்புணர்வு மன்றங்கள்:


அரசு, சிறப்புத் திட்டங்கள் மூலமாக மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை எல்லா மாணவர்களும் உணரும்படி செய்யவும், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் துணிவு பற்றிய கருத்துரைகளை வழங்கவும் இந்த மையங்களைத் தொடங்க வேண்டும்.தொற்றுநோய்கள், நோய்த் தடுப்பு முறைகள், மருத்துவத்தின் தேவை, அவசியம் போன்ற விழிப்புணர்வை பள்ளியிலும், பள்ளி சார்ந்த இடங்களிலும் இந்த மன்றங்கள் மூலமாக அறியச் செய்ய வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி