'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்படுத்த இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தடை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2015

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்படுத்த இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தடை?

மாணவர்களிடம் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கவும், கல்வித் தரம் பாதிக்காமல் இருக்கவும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்பாட்டுக்குத் தடை விதிக்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. மாணவர்கள், தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த, அண்ணா பல்கலை வளாகத்தில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மொபைல் போன் கொண்டு வர, முதலில் தடை இருந்தது.


சில ஆண்டுகளாக, மொபைல் போன் கொண்டு வரலாம்; ஆனால், வகுப்புநேரங்களில் பயன்படுத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

தனித்தனியே...:

அண்ணா பல்கலை வளாகத்தில், வகுப்புகள் மற்றும் விடுதிகள் இருக்கும் பகுதிகளில், மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கு, இலவச வை - பை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனைவருக்கும், தனித்தனியே பயன்பாட்டு முகவரிமற்றும் ரகசியக் குறியீட்டு எண்ணும் தரப்பட்டுள்ளது. இந்த வை - பை வசதியில், அனைத்து வகை இணையதளங்களையும், தங்கள் மொபைல் போனில், மாணவர்கள் இலவசமாக இயக்க முடியும். ஆனால், ஆபாச கருத்துக்கள் மற்றும் படங்களுடன் கூடிய இணையதளங்கள், 'யூ - டியூப்' எனப்படும், வீடியோ பார்க்கும் வசதியுடைய தளங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, இந்த ஆண்டு முதல், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை தடை செய்ய, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. ஆனால், 'டுவிட்டர், டெலக்ராம், இன்ஸ்டாக்ராம்' போன்ற தளங்களை இயக்க முடியும்.

அனைத்து பயிற்சிகளும்...:

இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:அண்ணா பல்கலை மாணவர்கள், பட்டப்படிப்பை முடித்தவுடன் பணிக்குச் செல்லவோ, உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி படிப்பை தொடரவோ, தேவையான அனைத்து பயிற்சிகளும் தரப்படுகின்றன.தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதில், அண்ணா பல்கலை மாணவர் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக, அனைத்து வகை தகவல் தொடர்பு வசதிகளும், இலவசமாக தரப்பட்டுள்ளன. ஆனால், சமீப காலமாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்றவற்றில் தவறான பதிவுகள், பரப்பி விடப்பட்டு, மாணவர்கள் கவனம் திசை திருப்பப்படுவதாக, பேராசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.எனவே, அண்ணா பல்கலைக்குள் வகுப்பு நேரங்கள் மற்றும் விடுதிகளில், சிறப்புவகுப்பு நேரங்களில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதள செயல்பாட்டைத் தடை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும், சமூக வலைதள இயக்கத்தை, வை-பை வசதியில் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சீனியர்களுக்கு தடை:

முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை, 'ராகிங்' செய்யாமல் தடுக்க, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சீனியர்கள் யாரும் ஜூனியருடன் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு பேசக்கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜூனியர் மாணவர்கள்வரும் பகுதிகளில், 'ராகிங்' தடுப்புக் குழு பேராசிரியர் கண்காணிக்கவும், ராகிங் தடுப்பு வாகனம், அண்ணா பல்கலை முழுவதும் சுற்றி வரவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி