அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழு அமைக்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2015

அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழு அமைக்கப்படுமா?

மாணவர்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும், தனி மனித ஒழுக்கம் வளரும் விதத்திலும், அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நகரப் பகுதியில் நிலவும் மோசமான சுகாதாரக்கேடு காரணமாக சிறியவர்கள், முதியவர்கள் அதிகளவில் பாதிப்படைகின்றனர். ஆறு முதல் 14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பிள்ளைகளின் சுகாதாரமான பழக்க வழக்கங்கள் குறித்து கவனிக்க பெற்றோர்களுக்கு நேரமும், விழிப்புணர்வும் இருப்பதில்லை.இதனால் பள்ளிகளில் குழந்தைகளுக்கு நற்பண்புகள், சுகாதார பழக்க வழக்கங்கள் குறித்து கற்பித்தலும், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. ஆனால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், பாடங்களை நடத்தி முடிப்பதில் மட்டுமே ஆசிரியர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மாணவர்களின் உடல் நலம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள், சிகை அலங்காரம், மற்றவர்களின் பார்வைக்கு தங்களை ஒழுக்கப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் ஆர்வமில்லாமலும், தெரியாமலும் உள்ளனர்.


கை, கால் விரல் நகங்களை வெட்டும் பழக்கம் பல குழந்தைகளுக்கு சுத்தமாக இல்லை. நகங்களை பற்களால் கடிப்பது, மண்ணில் விளையாடி விட்டு கை கழுவாமல் சாப்பிடுவது, சாலையோரம் விற்கும் ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி உண்பது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள் பல மாணவர்களிடம் உள்ளன.தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிப்பதைப் போலவே, மாணவர்களின் சுகாதாரப் பழக்க வழக்கங்களிலும், அந்தப் பள்ளி ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்களின் சுகாதாரமான பழக்க வழக்கங்களில் ஆசிரியர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பது வேதனையான விஷயமாகும்.


சுகாதாரமற்ற பழக்கங்களால், நாளடைவில் மாணவ, மாணவிகள் உடல் ரீதியாக பாதிப்படைகின்றனர். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளுக்கு ஆளாகின்றனர். சிறிய வயதில் உண்டாகும் இந்த சுகாதாரமற்ற பழக்கம், பெரியவர்களாகவளர்ந்த பின்பும் தொடர்கிறது. இதற்குத் தீர்வாக, பள்ளிகளில் சுகாதாரக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி