நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2015

நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்குவதில், அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. விதிகளுக்கு முரணாக, அரசியல் கட்சி சார்பான ஆசிரியர்களுக்குமுன்னுரிமை தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.


ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படும், செப்., 5ம் தேதி, தமிழகத்தில் சிறப்பாக கல்வி சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.தொடக்கக் கல்வி:பள்ளிக்கல்வி இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள, 67 கல்வி மாவட்டங்கள்; தொடக்கக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, 140க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி மாவட்டங்கள்; மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர், 350 பேருக்கு விருது வழங்கப்படும்.இத்துடன், மெட்ரிக் இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர், 20 பேருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தற்போது நடந்துவருகிறது. குறைந்தபட்சம், 15 ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்தவர், இந்த விருதுக்கு தகுதியானவர். தலைமை ஆசிரியர் பெயரும்,விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறது.


நிபந்தனைகள்:


*மாணவர் நலனுக்காக பாரபட்சமின்றி பணியாற்றி இருக்க வேண்டும்.

* கல்விச் சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

* எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இருக்கக் கூடாது.

* ஒழுங்கீன நடவடிக்கை மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவராக இருக்கக் கூடாது.இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையிலான குழு, தற்காலிக பட்டியல் தயாரித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் வழங்க வேண்டும். அவர், ஆக., 3ம் தேதிக்குள் நேர்காணல் நடத்தி, ஆறு பேர் கொண்ட தேர்வு பட்டியலை, இடைநிலைக் கல்வி இணை இயக்குனர் தலைமையிலான மாநிலக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இந்தக் குழு, இறுதி பட்டியலை தயாரித்து, அரசுக்கு அனுப்பும்.


அலையும் நிலை:


தற்போது, இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், ஆசிரியர்கள் மற்றும் சில சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சி மற்றும் உயர் அதிகாரிகளின் சிபாரிசுக்காக அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது.அரசியல் தலையீட்டால் மட்டுமே, நல்லாசிரியர் விருது பட்டியல் தயாராவதாக, ஆசிரியர் சங்கங்கள், பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து, தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:


நல்லாசிரியர் விருது, பெரும்பாலானவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை; வாங்கப்படுகிறது. அரசியல் தலையீட்டால் ஆசிரியர் பெயர் தேர்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களும், ஒழுங்கீன நடவடிக்கைக்கு உள்ளாவோரும் தேர்வாகின்றனர். அதனால், உண்மையில் சேவை நோக்கம் கொண்டவர்களுக்கு, விருது கிடைப்பதில்லை. இந்த ஆண்டாவது, அரசியல் தலையீடு இல்லாமல் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி