மருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 26-ம் தேதி தொடக்கம்: கே.கே.நகர் இஎஸ்ஐ கல்லூரியில் இருந்து 80 இடங்கள் ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

மருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 26-ம் தேதி தொடக்கம்: கே.கே.நகர் இஎஸ்ஐ கல்லூரியில் இருந்து 80 இடங்கள் ஒதுக்கீடு

மருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மருத்துவப் படிப்புக்கான 2 கட்ட கலந்தாய்வுகளில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்த 85 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.


17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கான ஒரு பிடிஎஸ் இடம் மட்டும் காலியாக உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 398 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 15 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான 3-ம் கட்டகலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவன் கூறும்போது, “மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து இடங்கள் இன்னும் திருப்பி அளிக்கப்படவில்லை. அதனால்மூன்றாம் கட்ட கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் இடம்பெறாது” என்றார்.


சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2015-16-ம் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர்சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியது.இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கு 65 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின்படி தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, மத்திய தொழிலாளர் நலத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால், அந்த 15 இடங்களைச் சேர்த்து மொத்தம் 80 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி