பி.எட்.: முதல் நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது விண்ணப்ப விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2015

பி.எட்.: முதல் நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது விண்ணப்ப விநியோகம்

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியது.இது கடந்த ஆண்டுகளைவிட அதிகம் என்கின்றனர் அதிகாரிகள்.


2015-16 கல்வியாண்டில் பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. கலந்தாய்வு செப்டம்பர் 4-ஆவது வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 13 மையங்களில் வியாழக்கிழமை(செப்.3) தொடங்கியது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.


பூர்த்தி செய்த விண்ணப்பத்தை "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை -600005' என்ற முகவரிக்கு செப்டம்பர் 11 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.இந்த நிலையில், விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலரும், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வருமான ஆர். பாரதி கூறியதாவது:பி.எட். கலந்தாய்வுக்கு கடந்த ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு 8 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடித்தோம்.ஆனால், முதல் நாளிலேயே 13 மையங்களிலும் 3,200 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன.


சென்னையில் உள்ள 2 மையங்களில் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன மையத்தில் மட்டும் அதிகபட்சமாக 500 விண்ணப்பங்களும், சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரி மையத்தில் 150விண்ணப்பங்களும் விநியோகமாகியுள்ளன.தூத்துக்குடி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட 109 விண்ணப்பங்களில், 100 விண்ணப்பங்கள் விநியோகமாகிவிட்டன.கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இது அதிகமாகும். மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துக் காணப்படுவதால் கூடுதலாக 2 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடிக்க முடிவுசெய்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி