அரசுக் கல்லூரிகளில் ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2015

அரசுக் கல்லூரிகளில் ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.இவர்களுடைய பணி நியமனத்துக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காததால், அவர்களுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக, பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.அரசுக் கல்லூரிகளில் ஷிஃப்ட்-1, ஷிஃப்ட்-2 என்ற இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், ஷிஃப்ட்-1-இல்1,331 கௌரவ விரிவுரையாளர்களும் ஷிஃப்ட்-2-இல் 1,550 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஷிஃப்ட்-1 பணியிடங்கள் அனைத்தும் அரசு ஒப்புதலளித்த இடங்களாகும். ஷிஃப்ட்-2 பணியிடங்கள் அரசு ஒப்புதல் அளிக்காத, சுயநிதிப் பாடப்பிரிவுப் பணியிடங்களாகும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் 11 மாதங்களுக்கு மட்டும் இவர்கள் பணியில் அமர்த்திக்கொள்ளப்படுவர். பின்னர், அடுத்த ஆண்டுக்குப் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.


கல்லூரிகள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தாங்களாகவே இவர்களை நியமித்துக்கொண்டு, அதன் பிறகு அவர்களின் நியமனத்துக்கான ஒப்புதலை அரசிடம் பெற்று ஊதியத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் பெற்றுக்கொள்வது வழக்கம். இந்த நிலையில், கல்லூரிகளில் ஷிஃப்ட்-1-இல் பணிபுரியும் 1331 கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்கின்றனர் பேராசிரியர்கள்.இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது:கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரிபவர்களில் பலர், அரசு அளிக்கும் தொகுப்பு ஊதியத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஆனால்,ஒவ்வோர் ஆண்டும் ஊதியம் வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது. நான்கு மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை அவர்களுக்கு ஊதியமே அளிக்காமல், அதன் பிறகே அவர்களுக்கு மொத்தமாக அளிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.எனவே, கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கு உடனடியாக அனுமதி அளித்து, அவர்கள் இதுவரை பணியாற்றிய மாதங்களுக்கு ஊதியம் கிடைக்க அரசு வழி செய்யவேண்டும் என்றனர்.


இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரி கூறுகையில், ஷிஃப்ட்-1 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் அவர்களுடைய நியமனத்துக்கு அனுமதி அளிக்கக் கேட்டு ஏற்கெனவே அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது.இந்த மாத இறுதிக்குள் அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி