இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அரசு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அரசு!

இடஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகள் குழப்புவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, 'இட ஒதுக்கீடு கொள்கையை, மறுபரிசீலனை செய்ய தேவையில்லை; இப்போதைய முறையே தொடரும்' என, அறிவித்துள்ளது.


குஜராத்தில், பி.சி., எனப்படும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள படேல் ஜாதியினர், கூடுதல் இட ஒதுக்கீடு சலுகைக் கோரி, தங்கள் ஜாதியை, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


போராட்டம்:


அதுபோல, அரியானாவில் ஜாட் இனமக்களும், ம.பி.,யில் மீனா ஜாதியினரும், தங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றில், 'நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கைகள், சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்தவில்லை; எனவே, இட ஒதுக்கீடு கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும்' என,தெரிவித்திருந்தார். 'மத்திய அரசை, பின்னால் இருந்து இயக்கும் அமைப்பு' என கூறப்படும், ஆர்.எஸ்.எஸ்.,சின் தலைவரே இவ்வாறு கூறியதால், நீண்ட காலமாக பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கைகளை, மத்திய அரசு மாற்றலாம் என்ற கருத்து எழுந்தது.இதையறிந்த, உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, ''இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றத்தை செய்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்; ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கருத்தை ஏற்று, இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டால், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்,'' என, நேற்று எச்சரிக்கை விடுத்தார்.


எச்சரிக்கை:


அதுபோலவே, பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலர்கள் என, தங்களை தாங்களே நினைத்துக் கொள்ளும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் போன்றோர், 'இட ஒதுக்கீடு முறையில், எந்த மாற்றமும் செய்யக் கூடாது' என, எச்சரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, மத்திய அரசு தன்நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.டில்லியில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, மத்திய அமைச்சரும், பா.ஜ.,மூத்த தலைவர்களில் ஒருவருமான, ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:இட ஒதுக்கீடு கொள்கையில், எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை; அதை மறுபரிசீலனை செய்ய, இப்போது எந்த தேவையும் இல்லை. பொருளாதார, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு, இட ஒதுக்கீடு அவசியம் என, மத்திய அரசு கருதுகிறது.


உண்மை இல்லை:


இந்த பிரச்னையில், எதிர்க்கட்சிகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன; அவர்களின் எண்ணம் நிறைவேறாது; இட ஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் செய்ய, நாங்கள் விரும்பவில்லை; அவ்வாறு வெளியாகும் செய்திகளில், எந்த உண்மையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதனால், இப்போதைக்கு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.எனினும், இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து, சமீபகாலமாக வலுத்து வருவதையும் மறுப்பதற்கில்லை.குறிப்பாக, சமூக ரீதியில் இல்லாமல், பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி