ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?- தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?- தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்

ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் உரிய பேச்சுவார்த்தை மூலம் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,"ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் எந்தத் தரப்பினருக்கும் நிறைவோ நிம்மதியோஇல்லை; ஆட்சி என்ற ஒன்று முறையாக நடைபெறுகிறதா என்பதே அனைவருக்கும் சந்தேகமாக உள்ளது.வேறு வழியில்லாமல் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்தி முடித்து விட்ட போதிலும், அரசு இயங்குகிறதா என்றே தெரியவில்லை.


லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, நல்ல வேளையாக மத்திய அரசின் அமைச்சர், லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய காரணத்தால், அந்தப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும், ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதி நிதிகளை முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேச வில்லை. அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது.அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச் செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது? உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசி விட்டு, போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா?கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில் இது வரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளைமேற்கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்.ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன் வரவேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி