பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான கட்டிடங்கள்,காய்ந்த சருகுகள் ,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள், பராமரிக்கப்படாத மாணவர் கழிப்பறைகள்....
இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் இன்றைய அடையாளங்கள். நகர்ப்பகுதியில் உள்ள ஒருபெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பேசியபோது அவர் சொன்ன கருத்துக்கள் இவை..“பள்ளியில் நன்றாக பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள்.எல்லா பாட வேளைகளுக்கும் ஆசிரியர்கள் வந்துவிடுகிறார்கள்.
கழிப்பறைகள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதால் காலையில் பள்ளிக்கு வந்துவிட்டால் மாலை வீட்டுக்குச் சென்றவுடன்தான் கழிப்பறைக்குச்செல்வோம்.”சுயநிதி தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு பயந்து தன் பெண் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நினைக்கும் பெற்றோர்க்கு ஏற்படும் முதல் பிரச்சனை இது.கழிப்பறை பராமரிப்புக்காக அரசால் நிதி ஏதும் ஒதுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலாகபெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெயரால் வசூல் செய்யப்படும் நிதியில் தினமும் கழிப்பறை சுத்தம் செய்ய துப்புறவுப் பணியாளர் ஒருவரை பணியமர்த்திக்கொள்வது இப்பிரச்சனைக்கான உடனடித் தீர்வாகும்.தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் மனது வைத்தால் எல்லாப் பள்ளிகளிலும் இதை நடை முறைப்படுத்த முடியும்.நான் பணிபுரியும் பள்ளி உட்பட சில பள்ளிகளில் இது நடைமுறையில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 6 ம் வகுப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும் நிலையில் அரசுப்பள்ளிகளின் தற்போதைய அடையாளங்கள் மாற்றப்படாவிட்டால் மாணவர் இல்லா பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மாணவர் இல்லா பள்ளியில் ஆசிரியருக்கு என்ன வேலை? ஆசிரியர் இல்லா பள்ளியில் சங்கங்களுக்கு என்ன வேலை?ஊதிய முரண்பாடுகள்,பணிச்சுமை போன்ற வழக்கமான கோரிக்கைகளைத்தாண்டி ஆசிரியர்கள் போராட வேண்டிய உண்மையான பிரச்சனைகள் பல நம்முன்னே உள்ளன.கல்வி வியாபாரத்தில் வெற்றி பெரும் நோக்கத்தோடு 12 ம் வகுப்புபாடத்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றும் சுயநிதிப் பள்ளிகளுக்கு ஆதரவாக இருக்கும் இந்த மனப்பாட கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் விதமாக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.பள்ளிக்கழிப்பறைகள் மற்றும் கட்டிடங்களில் தூய்மை பராமரிக்கப்பட்டு தயக்கமில்லாமல் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் சூழலை உருவாக்க ஆசிரியர்கள் போராட வேண்டும்.
பள்ளி நிதியை தவறாக பயன்படுத்தும் நோக்கத்தோடு மாணவர் எண்ணிக்கைஅதிகமுள்ள நகர்ப்புற பள்ளிகளில் பணியேற்க லஞ்சப் பணம் லெட்சங்களில் கொடுத்து பணிமாறுதல் பெற்றுவரும் சில ஊழல் தலைமை ஆசிரியர்களுக்கு எதிராக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்தால் மாணவர் சேர்க்கை தானாக உயரும்.மாணவப் பருவத்தின் உண்மையான அடையாளத்தை இழந்து வரும் இந்த தலைமுறை மாணவர்களை மீட்டெடுக்கும் விதமாக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.போராடாமல் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை என்பது வரலாறு.சங்கங்களின் பெயரால் பிளவுபட்டு போட்டி அரசியலில் சிக்கிவிடாமல் இதுபோன்ற ஆராக்கியமான மாற்றம் வேண்டி ஆசிரியர் சங்கங்கள் போராட வேண்டும் என்பதே என்னைப்போன்ற பெரும்பான்மையான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கனவு.
கி.முருகன்
முதுகலை ஆசிரியர
்அரசு மேல் நிலைப் பள்ளி
புதுக்கோட்டை உள்ளூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
Well done,sir.
ReplyDeleteSalute sir.... But salary also very important to run the live na sir.... SGT
ReplyDelete