அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு:

தமிழகத்தில், அரசு பஸ்சை இயக்கிய, முதல் பெண் டிரைவர் என்ற பெருமைக்கு உரியவர் வசந்தகுமாரி, 57. துவக்கத்தில், பஸ் டிரைவர் பணியில் சேர முயன்ற போது, உயரம் குறைவு எனக்கூறி ஓரம் கட்டப்பட்டார்; தொடர் முயற்சியால், தன், 34 வயதில், அரசு பஸ் டிரைவரானார்.


அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, 'சிறப்பாக செயல்படு; ஆதரவாக இருப்பேன்' என்று கூறிய வார்த்தைகளை உள் வாங்கி, பஸ்சை இயக்க துவங்கினார். தற்போது, நெல்லை கழகமாக செயல்படும், அப்போதைய நேசமணி போக்குவரத்து கழகத்தில், 1993ல் பணியில் சேர்ந்தார். பயணிகளும், பணியாளர்களும் வியக்கும் அளவிற்கு சிறப்பாக பஸ்சை இயக்கினார்.துவக்கத்தில், நகர பஸ், நிறுத்தமில்லா பஸ் என இயக்கியவர், பின், நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பஸ்சை இயக்கி வந்தார்.23 ஆண்டுகள் கடுமையாக உழைத்தவருக்கு, வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.சர்க்கரை வியாதி, தலைசுற்றல், முதுகு வலி என, அடுத்தடுத்த பாதிப்பிற்கு ஆளான அவர், பணிமனைக்குள் பஸ்களை இயக்கி முறைப்படுத்தும், மாற்று பணி கேட்டார்; நிர்வாகம் தர மறுத்து விட்டது. வேறு வழியின்றி, மாதத்தின் சில நாட்கள் மட்டும் வேலை பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில் வேலைக்கே செல்ல முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.விளைவு, ஏழு மாதங்களாக பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் உள்ளார். இவரது கணவர் செபஸ்டின் இறந்து விட்டதால், மகன் அகஸ்டின் வீட்டில் இருக்கிறார். பிழைப்புக்கு, மகன் கூலி வேலை செய்கிறார். இதனால், மொத்த குடும்பத்தையும் வறுமை வாட்டி வதைக்கிறது.


தன் நிலை குறித்து வசந்தகுமாரி கூறியதாவது:அண்ணா தொழிற்சங்கத்தில், பொருளாளராக பதவி தந்தனர். பஸ்சை இயக்குவதுடன்,அந்த பணியையும் பார்த்து வந்தேன்; பின், பொருளாளர் பதவியை இழக்க நேரிட்டது. தற்போது கழுத்து எலும்பில் தேய்மானம் பிரச்னை உள்ளது. கையை உயர்த்தினால் வலி ஏற்படுகிறது. பணியில் இருக்கும்போது பல நேரங்களில், தலைச்சுற்றல் ஏற்பட்டு, பாதியிலேயேவீடு திரும்பி உள்ளேன். உடல் நலம் குன்றிய தொழிலாளர்களுக்கு மாற்று பணி தர வேண்டும் என்பது ஊழியர் ஒப்பந்தத்தில் இருக்கிறது. மாற்று பணி தர அதிகாரிகள் முன் வந்தாலும், சில அரசியல்வாதிகள் குறுக்கீட்டால் தருவதில்லை. முதல்வரை மீண்டும் சந்தித்து முறையிடலாம் என்றால், அனுமதிதருவதில்லை. அவரை நான் பார்த்து விடாமல் இருக்கும் வகையில், சிலர் செயல்படுகின்றனர். என் நிலை குறித்து முதல்வர் அறிந்தால்,எனக்கு மாற்று பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில், 'ஆன் டூட்டி' என்ற பெயரில், தொழிற்சங்க பணி எனக்கூறி விட்டு பணியே செய்யாமலும்; 'அதர் டூட்டி' என்ற பெயரில் எளிமையான மாற்று பணியிலும், 5,000 பேர் இருக்கின்றனர். ஆனால், நோயில் சிக்கிய பெண் ஊழியருக்கு, மாற்று பணி தராமல் இழுத்தடிப்பது வேதனைக்குரியது என, சக ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி