'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2015

'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்

''தகவல் அறியும் உரிமை சட்டப்படி, விபரங்கள் கோரும் மனுவையும், அதற்கான பதிலையும், 'ஆன்லைனில்' அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய தகவல்ஆணையர் யசோவர்த்தன் ஆசாத் கூறினார்.நெய்வேலி நிலக்கரி கழகமான, என்.எல்.சி., சார்பில், 'தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.


என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை வகித்தார்; தகவல் அதிகாரி ஸ்ரீதர் நன்றி கூறினார்.இதில், யசோவர்தன் ஆசாத் பேசியதாவது:தகவல்உரிமை சட்டத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. பிற நாடுகளும், இச்சட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளன. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்,அவற்றின் இணையதளங்களில், அரசின் திட்டங்கள், ஊழியர் விபரம், ஊதியம், சொத்துக்கள், திட்ட ஒதுக்கீடு, செலவினம் போன்ற தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மொத்தம் உள்ள, 666 துறைகளை சேர்ந்த இணையதளங்களில், பெரும்பாலானவை மேம்படுத்தப்படுவது இல்லை. இதனால், தகவல் உரிமை சட்டத்தில், பொது மக்கள் கேள்வி கேட்கின்றனர். இப்படி, ஆண்டுக்கு,4.6 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. இவற்றுக்கு, சரியான பதில்அளிக்காத நிலையில், மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல்முறையீடு அதிகரிப்பதால், அவற்றை பைசல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.எனவே,துறை இணையதளங்களில், முழு விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்; அதன்மூலம், பொது மக்களின் கேள்விகளை குறைக்கலாம். ஏனோதானோ என பதில் அளிக்காமல், மக்கள் வரி பணத்தில் இயங்கும் துறைகள், தகவல் தருவது கடமை என, உணர வேண்டும்.தாமதமாக பதில் அளிப்பது, தகவல் மறுப்புக்கு சமம். எனவே, விரைவாக அளிக்க வேண்டும். அதற்கு, தகவல் அதிகாரிகள் முழுமையாக பயிற்சி பெற வேண்டும்; ஒவ்வொரு துறையிலும், அதற்கான ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.


மத்திய தகவல் ஆணைய உத்தரவுகள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை, தகவல் அதிகாரிகள் தெரிந்திருக்க வேண்டும். தகவல் கேட்டு வரும் மனுக்களில், 7.3 சதவீத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. உரிய முறையில் அனுப்பப்படும் மனுக்களை, தள்ளுபடி செய்யக் கூடாது.தகவல் உரிமை சட்டப்படி, தபால் மூலம் மட்டுமே தற்போது, மனுக்கள் அனுப்பப்படுகின்றன. பதிலும், தபாலில் செல்வதால், தாமதம்ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஆன்லைனில் தகவல் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி