இந்திய அரசிலமைப்பு சட்ட நாள்(26.11.15) கட்டுரை:- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2015

இந்திய அரசிலமைப்பு சட்ட நாள்(26.11.15) கட்டுரை:-

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறுஅரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன?சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அரசர்களின் ஆட்சியே நடைபெற்று வந்தது. அந்தக் காலங்களில் ஒரு நாட்டை ஆள்வதற்கு நிலையான சட்டங்கள் இருந்திருக்கவில்லை. அரசர்களின் விருப்பப்படியும், மத சம்பிரதாயங்களின் படியும், தலைமுறைகளாக பின்பற்றி வந்த நடைமுறைகளின் படியும் நாடுகள் ஆளப்பட்டு வந்தன. கடந்த முன்னூறு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தொடர்ச்சியான அரசியல், சமூகப் போராட்டங்களாலும், விழிப்புணர்வாலும் அரசர்களின் அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டு, சட்டத்தின் அடிப்படையில் மக்களால் அல்லது மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி செய்வது உலக நாடுகள் அனைத்திலும் நடைமுறைக்கு வந்துவிட்டது.


அரசு என்று சொன்னால் அது மக்கள் தொகை, அவர்கள் வாழும் நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை ஆகிய நான்கு அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். ஆள்வோர், ஆளப்படுவோர் என இரு முக்கிய பகுதிகளை கொண்டுள்ள அரசில், அந்த இரண்டு பக்திகளையும் இணக்கமாக இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுதான் அரசியலமைப்பு (constitution) எனப்படுகிறது.அரசியலமைப்பானது அரசாங்கத்தின் அடிப்படை அம்சங்களையும், பணிகளையும், அதிகாரங்களையும் நன்கு வரையறுப்பதுடன், மக்களின் உரிமையையும் பாதுகாக்கிறது. சட்டம் எவ்வாறு இயற்றப்பட வேண்டும், சட்டத்தின் ஆட்சி எப்படி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு வரையறுக்கிறது.இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம்இந்தியாவுடன் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்து, இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசியார் கி.பி.1600ல் வழங்கிய உரிமை ஆணைகள் தான் இந்தியாவின் நவீன சட்டத்தின் ஆரம்பம் எனலாம். வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் நிலப்பகுதிகளை படிப்படியாக வென்று ஆளவும் ஆரம்பித்தது. அப்போது கம்பெனியின் அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் முறைப்படுத்த 1773ல் ஒழுங்குமுறைச் சட்டம், 1784ல் பிட் இந்தியச் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டன. அவ்வப்போது தேவை ஏற்படும் போது கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை முறைப்படுத்த 1853வரை பல பட்டயச் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1857ல் சிப்பாய் புரட்சி என்னும் மக்கள் எழுச்சிக்கு பின்னர், இந்தியாவை ஆளும் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசு எடுத்துக்கொண்டது. அதைப் பின்பற்றி 1858ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.


அரசு நிர்வாகத்தில் மண்ணின் மைந்தர்களான இந்தியர்கள் பங்குபெற வேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களின் சுதந்தர போராட்டத்தை பலவீனப்படுத்தவும் சிறு சலுகைகள் அளிக்கும் பல சட்டங்கள் அவ்வப்போது இயற்றப்பட்டன. எனினும் 1935ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓரளவு முழுமையான அரசியல் சட்டம் எனலாம். அதன் பின்னர் இந்தியா சுதந்தரம் பெறும் நேரத்தில் நமக்கென்று சொந்தமான அரசியல் சட்டம் வேண்டும் என்ற நோக்கில், பிரிட்டனின் கேபினட் தூது குழுவின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், ராஜாஜி, வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற முக்கிய தலைவர்கள் உள்பட 389 உறுப்பினர்களுடன் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 1946ல் தொடங்கப்பட்டது. இச்சபைக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். இரண்டு வருடம் பதினோரு மாதம் பதினெட்டு நாள்கள் உழைத்து , பல நாட்டு அரசியல் அமைப்புகளையும், அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து விவாதித்து சுதந்தர இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது.இவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பை நுண்மையாக ஆராய்ந்து இறுதி செய்ய டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய வரைவுக் குழு (draft committee) ஆகஸ்ட் 29, 1947 ல் அமைக்கப்பட்டது. அரசியலமைப்பு வரைவுக் குழு அளித்த அரசியலமைப்பின் இறுதி வடிவத்தை நவம்பர் 26, 1949ல் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதில் கையெழுத்திட்டார். அதில் அப்போது 22 பகுதிகளும் (parts), 315 உறுப்புகளும் (articles), 12 அட்டவணைகளும் (schedules) இருந்தன. அவ்வப்போது ஏற்பட்ட கால மாற்றம், தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு தற்போது 22 பகுதிகள், 395 உறுப்புகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாக இந்திய அரசிலமைப்புச் சட்டம் விளங்குகிறது.ஜனவரி 26, 1930ல் இந்திய மக்கள் சுதந்தர சபதம் எடுத்துக்கொண்டதை நினைவுகூரும் பொருட்டு, 1950ஆம் அண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியா தனக்கென உருவாக்கிக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜெந்திர பிரசாத் பதவியேற்றார்.


இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்



மக்களின் இறைமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் முகப்பில் இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது:இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை மனம் விரும்பி ஒரு முழு இறைமை பெற்ற, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்று உறுதி கொண்டு அதன் குடிமக்கள் யாவருக்கும்“சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் நீதியையும்;“எண்ணம், பேச்சு, கருத்து, நம்பிக்கை, வழிபாடு தொடர்பான உரிமைகளையும், வாய்ப்புகள், அந்தஸ்து ஆகியவற்றில் சமத்துவத்தையும்;நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளையாமல், தனிமனித உரிமையைப் பாதுகாத்து உறுதிப்படுத்தி சகோதரத்துவத்தை வளர்க்கவும்;“1949-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள், இவ்வரசியல் அமைப்பை உருவாக்கி, நிறைவேற்றி எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொண்டிருக்கிறோம்.”இவ்வாறு உலக நாடுகளின் அரசியலமைப்பில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் ஒருங்கே கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. அடிப்படை உரிமைகள், நீதித்துறை ஆகியவை அமெரிக்க அரசியலமைப்பிலிருந்தும், பாராளுமன்ற ஆட்சி முறை பிரிட்டனிலிருந்தும், அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் அயர்லாந்திலிருந்தும், குடியரசு தலைவரின் அவசர நிலைக் கால அதிகாரங்கள் ஜெர்மனியிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக இந்திய அரசியலமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கமான சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது.ஒரு முழு இறைமை பெற்ற மக்களாட்சிக் குடியரசாகவும், சமய சார்பற்ற சமதர்ம குடியரசாகவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை குடிமக்களுக்கு அளித்து, அவர்களுக்கான கடமைகளையும் வரையறுத்து, ஒரு கூட்டாட்சி அரசாங்கமாக, மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் பாராளுமன்ற ஆட்சி முறையும், சுதந்தரமான நீதித்துறையையும் கொண்டு இந்திய அரசமைப்பு இயங்குகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் முழு வாக்குரிமை அளித்து ஒரு முழுமையான ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது.


இச்சிறப்புகளுக்கெல்லாம் காரணம் இந்திய அரசியலமைப்பு தான்.சென்ற நூற்றாண்டில் சுதந்தர நாடுகளான பல நாடுகளிலும் அரசியலமைப்புகள் சீர்குலைந்தும், சர்வாதிகாரமும் குழப்பமும் ஆட்சி செய்து கொண்டிருக்கையில்,இந்திய நாடு மட்டும் தனித்துவமான பாதையில், மேலும் மேலும் செழுமைப் பெற்ற ஒரு மக்களாட்சி நாடாக விளங்குவதுடன், உலகின் முன்னணி நாடுகளுக்கு சவால் விடும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்தகைய அமைதியுடன் கூடிய முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணம் நமது அரசிலமைப்பு தான் என்றால் அது மிகையில்லை. இதை உணர்ந்து கொள்ளும் போதுதான் குடியரசு தினத்தை நாம் சிறப்புடன் கொண்டாடுவதன் முக்கியத்துவம் விளங்கும்.


இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள்:


1. சமத்துவ உரிமை

2. சுதந்தர உரிமை

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை

4. சமய சுதந்தர உரிமை

5. பண்பாடு, கல்வி உரிமை

6. அரசியலமைப்புக்கு உள்பட்டு பரிகாரங்களைப் பெறும் உரிமை


இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு விதித்துள்ள அடிப்படை கடமைகள்:


1. அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடத்தல், தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல்

2. இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்த கொள்கைகளை போற்றுதல், பின்பற்றுதல்

3. இந்தியாவின் இறையான்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த்தல், பாதுகாத்தல்

4. நாட்டை பாதுகாக்கவும், தேசப் பணியாற்றவும் அழைக்கும்போது வந்து அவ்வாறுபணியாற்றுதல்

5. சமயம், மொழி, வட்டாரம் ஆகியவற்றைக் கடந்து ஒற்றுமையுடன் சகோதர நேயத்தையும், இணக்கத்தையும் பேணுதல்; பெண்களின் கண்ணியத்தைச் சிறுமைப்படுத்தும் செயல்களை விட்டுவிடுதல்

6. நமது கூட்டுக் கலாசாரத்தின் மிக உயர்ந்த பாரம்பரியத்தை மதித்தல், பாதுகாத்தல்

7. காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சுழ்நிலைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல், வாழும் உயிர்களிடம் இரக்கம் காட்டல்

8. அறிவியல் சிந்தனை, மனித நேயத்தை வளர்த்தல்

9. பொதுசொத்தை பாதுகாத்தல், வன்முறையை ஒழித்தல்

10. தேசத்தை முன்னேற்ற தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் முயற்சித்தல், தொண்டாற்றுதல்

11. நிலவரத்துக்கேற்ப குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர், அந்தக் குழந்தை ஆறு வயது முதல் பதினான்கு வயதுவரை கல்வி கற்க வசதி ஏற்படுத்தித் தருதல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி