புதிய கல்விக் கொள்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்: பேராசிரியர் ராமானுஜம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2015

புதிய கல்விக் கொள்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்: பேராசிரியர் ராமானுஜம்

மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று, கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், கல்வியாளருமான ஆர்.ராமானுஜம் வலியுறுத்தினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் "உயர் கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.


இதில் புதிய கல்விக் கொள்கை குறித்து கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ஆர்.ராமானுஜம் பேசியது: புதிய கல்விக் கொள்கைக்கான விவாதப் பொருள்களிலிருந்து அந்தக் கொள்கை எப்படியிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கொள்கை கல்வி தொடர்பான பிரச்னைகளை முழுக்க, முழுக்க நிர்வாக ரீதியான பிரச்னையாகவே பார்க்கிறது.கல்வியின் ஆன்மாவை இது தொடவில்லை. இந்த விவாதப் பொருள்களில் ஆசிரியர்கள் மிகவும் தரக்குறைவானவர்களாகப் பார்க்கப்படுவதை அறிந்துகொள்ளலாம்.


அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் கல்வி பெறுவதில்லை, உயர் கல்வி நிறுவனங்களுக்குள் அவர்களால் இன்னமும் வர முடியவில்லை என்பதுதான் நமது மிகப்பெரிய பிரச்னை. ஆனால், இந்தியாவில் உருவாக்குவோம் என்கிற திட்டத்துக்காக பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்களிலிருந்து தொழிலாளர்களை உருவாக்குவதாகவே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சமூகத்தில் உள்ள பிரிவுகளையும், வேறுபாடுகளையும் நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளன. சமூக அவலங்களைப் போக்கும் கருவியாக கல்வியை இந்தப் புதிய கொள்கை பார்க்கவேயில்லை. மிக முக்கியமாக கலாசார ஒருமுகத்தன்மையையும்இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. தொழில் நிறுவனங்களின் நலன்கள், மதவாதக் கொள்கைகள் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து புதிய கல்விக் கொள்கையாக தரப்பட உள்ளது.எல்லோருக்கும் வேலை தரப்போகிறோம் என்கிற புதிய கொள்கையை எதிர்ப்பது சுலபமல்ல. ஆனால், கல்வி பற்றிய அக்கறை கொண்ட அனைவரும் எதிர்க்க வேண்டியதுதான் இந்தப் புதிய கொள்கை. உயர் கல்வியில் அடிப்படையான மாற்றங்கள் தேவை. ஆனால், இந்த மாற்றங்கள் தேவையில்லை என்றார் அவர். சந்தைப்பொருளாக மாற்றக் கூடாது: அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் சத்கோபால்:உலக வர்த்தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா திறந்துவிட உள்ளது. நைரோபியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லை என்றால், அதை எப்போதும் திரும்பப் பெற முடியாது.


கல்வி என்ற நிலையில் இருந்து சந்தையில் விற்கப்படும் பொருளாக அது மாற்றப்பட உள்ளது. மாணவர்கள் நுகர்வோர்களாகவே பார்க்கப்படுவர். உயர் கல்வியை பணம் கொடுத்து மட்டுமே கற்க முடியும் என்ற நிலை உருவாகும். எனவே, இதை அனைவரும் எதிர்க்க வேண்டும். இப்போதைய உயர் கல்வி முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஆனால், அதை சந்தைக்குத் திறந்துவிடுவது தீர்வாகாது என்றார் அவர். மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி:மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஒரேயொரு கல்வியாளரைத் தவிர மீதமுள்ள அனைவரும் அதிகாரிகள்தான்.உலக வர்த்தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதன் மூலம் உயர்கல்வி முழுக்க, முழுக்க சந்தைப் பொருளாக மாறும். இந்த ஒப்பந்தம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடுகிறது. இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லையென்றால் நமது தலையெழுத்தை மாற்ற முடியாது. இப்போது நமது கல்விக்கும், ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களுடனை இணைந்து மிகப்பெரிய போர்க்குரல் எழுப்பினால் மட்டுமே மீட்சி உண்டு என்றார் அவர்.


புதிய கல்விக் கொள்கை குறித்த புத்தகத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் ஜி.முனுசாமி பெற்றுக்கொண்டார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, லயோலா கல்வியியல் கல்லூரியின் செயலாளர் டோமினிக் ராய்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொருளாளர் கே.செந்தமிழ்ச்செல்வன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.ரத்னசபாபதி, பேராசிரியர் மணி, பேராசிரியர் எஸ்.மோகனா உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி