அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைக்க பரிசீலனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2015

அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைக்க பரிசீலனை!

புதுச்சேரி, காரைக்காலில் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. ஒரிரு நாட்களில் புதிய தேர்வு அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 433 அரசு பள்ளிகள்,270 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. கடந்த காலங்களில் தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி, விடுமுறை விடுவதற்கும், அரசு பள்ளிகளில் தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிப்பதற்கும், பெரும் வித்தியாசம் இருந்தது.


குறிப்பாக, அரையாண்டு தேர்வை, டிசம்பர் மூன்றாவது வாரத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, முடித்து, விடுமுறைஅறிவிப்பது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வழக்கமாக உள்ளது.


அரையாண்டு தேர்வு


அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி முதல் வாரத்தில், தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அரசு பள்ளிகளில், டிசம்பர் கடைசியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தான், அரையாண்டு தேர்வு துவங்கும். பின், விடுமுறை அளித்து, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள்முடிந்து, 19ம் தேதிக்கு பிறகே, அரசு பள்ளிகள் திறப்பது வழக்கம். பொதுத் தேர்வுக்கு தயாராகும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜனவரி மாதம் என்பது மிக முக்கியமான காலக் கட்டமாகும்.ஏனென்றால், பொதுத் தேர்வு துவங்க ஓரிரு மாதங்களே இருக்கும் சூழ்நிலையில், ஜனவரி மாதத்தில் பள்ளிகள் இயங்கினால் தான், பாடங்களை மீள் பார்வை செய்ய முடியும். ரிவிஷன் தேர்வுகளை நல்ல முறையில் எழுத முடியும். எனவே, அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ,மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, தேர்வு அட்டவணை, விடுமுறை போன்றவற்றை, தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளி களுக்கும் ஒரே மாதிரியாக மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை பின்பற்றி வருகிறது.இந்தாண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி துவங்கி,22ம் தேதி வரை நடத்தி முடித்து, 23ம் தேதி முதல் 3ம் தேதிவரை விடுமுறை அளித்து ஜன. 4ம் தேதி பள்ளிகள் திறக்க, கல்வித்துறை அட்டவணை வெளியிட்டிருந்தது.


பள்ளிகள் மூடல்


கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலில் கன மழை பெய்ததால் பள்ளிகள் மூடப்பட்டன. நவம்பர் மாதத்தில் மூன்று நாட்கள், இம்மாதத்தில் 1ம் தேதி முதல் ஐந்து நாட்கள் என எட்டு நாட்கள் இது வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கன மழையால், கிராமப்புற மாணவர்கள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள்,சீருடை, புத்தகப் பை, வழிகாட்டி நுால்கள், சான்றிதழ்களை இழந்துள்ளனர்.குடும்பத்தினருடன் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். மழையால் பாதித்த மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதன் எதிரொலியாக அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.டிசம்பர் 17ம் தேதி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின், அரையாண்டு தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. மழை விட்டால் தான் தேர்வுகள் நடக்கும் தேதிகுறித்து, சரியாக முடிவெடுக்க இயலும் என்பதால் தீவிர ஆலோசனையில் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில்புதிய அட்டவணை வெளியாக உள்ளது.


அரையாண்டு விடுமுறை?


தொடர் மழையால் ஏற்கனவே எட்டு வேலை நாட்களை பள்ளிகள் இழந்துள்ளன.எனவே, அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில், பண்டிகை நாட்களுக்கு மட்டும் இந்த ஆண்டு விடுமுறை அளித்து, ஞாயிறு தவிர்த்து அனைத்து நாட்களிலும் பள்ளிகளை நடத்தலாம் என்று கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி