படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ்வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2016

படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ்வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 13 பேருக்கு மாற்றுச் சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-


10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரத்தில் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி மாற்றுச் சான்றிதழ் (டி.சி) அளித்து பள்ளியை விட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒரு சில மாவட்டங்களில் ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும், இவ்வாறு செய்வது தவறாகும். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், குறைந்தபட்சமதிப்பெண் பெறவும் கற்றல் உபகரணங்கள், குறுந்தகடுகள், கையேடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது, கையேடுகள், உபகரணங்கள் மூலம் அவர்களின் கல்வித்தரத்தைஉயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு ஏற்கனவே கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை முழுவதுமாக நம்பி பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

தமிழக அரசும் மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கியுள்ள இந்தத் தருணத்தில் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.அதுபோன்று நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுமாயின் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி