ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அலற வைக்கும் ‘CPS. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2017

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அலற வைக்கும் ‘CPS.

சி.பி.எஸ். என்றால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அலறியடித்து ஓடுகிறார்கள்.அப்படி என்னதான் இருக்கிறது சி.பி.எஸ்.சில்.சி.பி.எஸ். என்றதும் ஏதோ ஒரு கல்வித்திட்டம் என்று நினைக்க வேண்டாம்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்றபுதிய ஓய்வூதிய திட்டம்தான் சி.பி.எஸ்.கடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ‘கான்ட்ரிபியூட்டரி பென்சன் ஸ்கீம்’ என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.சி.பி.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், இதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அமல்படுத்திக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் இந்த புதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.தொடக்கத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லை.சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து உள்ளது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம்நடத்தியபோது இந்த கோரிக்கை முதலிடத்தை பிடித்து இருந்தது. தற்போது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டமும், 22-ந் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடத்த இருக்கும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திலும் புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என்பதே முக்கிய கோரிக்கையாக கூறப்பட்டு உள்ளது.தொடக்கத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த சில விமர்சனங்கள் இருந்தாலும், ஊழியர்களிடம் அதற்கானஎதிர்ப்பு எதுவும் இல்லை.

இந்தநிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, பணியில் இருந்தபோது உயிரிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதே முதல் அதிர்ச்சிகரமான தகவலாக இருந்தது.விபத்தில் இறக்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று யாருக்கும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.எனவே ஜேக்டோ-ஜியா போன்ற அமைப்புகள் இதுபற்றிய ஆய்வினை நடத்தியபோது, 2004-ம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகைக்கான கணக்கு என்னவானது என்றே தெரியவில்லை என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டம் அளித்த பல்வேறு கொடைகள், பண பலன்கள் எதுவும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.முன்பு அரசு பணியில் சேர்ந்துவிட்டால் ஓய்வுக்குப்பிறகு வாழ்நாள் முழுவதும் ஒரு வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது ஓய்வுக்கு பின்னர் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் மட்டுமே ஒரு அரசு ஊழியரின் வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஊன்றுகோலாக இருக்கிறது. அதுவே இல்லை என்கிறபோது பணியில் பிடிப்பு இல்லாத நிலையில் இருப்பதாகவே பல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தெரிவிக்கிறார்கள்.எத்தனையோ போராட்டத்துக்கு பின்னரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படாமல், ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும்போதும் சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்வதை பார்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அலறுகிறார்கள்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி