பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படுமா? - ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2017

பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படுமா? - ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு

மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு எழுதவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அட்டவணையும், கருத்தியல் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கீடு குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நடப்புக் கல்வியாண்டிலேயே கருத்தியல் தேர்வுக்கு (தியரி எக்ஸாம்) முன்னதாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்பதற்கான அரசாணைத் திருத்தங்களும் வெளியிடப்பட்டு விட்டன. வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில்அதற்கான மாதிரி வினாத்தாள் வடிவமைப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

அரையாண்டுத் தேர்வுகளும் 23-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அரையாண்டு விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் ஜன.2-ல் திறக்கப்பட உள்ளன.அரையாண்டுத் தேர்வையொட்டி பிளஸ் 1 மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி செய்முறைத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட கல்வித்துறை, செய்முறை பாடங்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் தொழிற்கல்வி சார்ந்த தட்டச்சு, வேளாண் செய்முறைகள், கணக்குப் பதிவியல், தணிக்கையியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு வினாத்தாள் வடிவமைப்பு கல்வித்துறையால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

முதன் முறையாக அரசுப் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள பிளஸ் 1 மாணவர்கள் இதனால் பாதிப்படைவர் என்று பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதத்தில் பொங்கல்விடுமுறைக்குப் பின் ஜன.18-ம் தேதி தொடங்கி31-ம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே செய்முறைத்தேர்வுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ள நிலையில், செய்முறை வினாத்தாள் வடிவமைப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால் மாணவர்களை எப்படி தயார்படுத்துவது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.மாணவர் நலன் கருதி உடனடியாக பிளஸ் 1 வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு வினாத்தாள் வடிவமைப்பையும், மாதிரி வினாத்தாளையும் உடனடியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர்மோவூர் ராமமூர்த்தி கூறியது: பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதவுள்ளதால் பதற்றத்தில் உள்ளனர். செய்முறைத் தேர்வுக்குரிய வினாத்தாள் வடிவமைப்புக் குறித்து கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அறிவியல் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில் கல்வித்துறை உடனடியாக செய்முறைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி