பரபரப்பான அரசியல் சூழலில் நாளை சட்டப் பேரவைக் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2018

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை சட்டப் பேரவைக் கூட்டம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜன.8) கூட உள்ளது. ஒக்கி புயல், போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை உள்பட முக்கியப் பிரச்னைகளை பேரவையில் எதிர்க்கட்சிகள் எடுத்து வைக்க உள்ளதால் இந்தக் கூட்டத் தொடருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2018- ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். அரசின் கொள்கைகள், செயல்திட்டங்களை எடுத்துரைப்பதாக ஆளுநர் உரை இருப்பது வழக்கமான ஒன்று. அரசு அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த உரை அமையும். ஆனால், தற்போதைய ஆளுநர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறார். இதனால், அரசின் விவரங்கள் அடிப்படையில் ஆளுநர் உரையாற்றுவாரா அல்லது அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் உரையாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: மாவட்ட வாரியாக ஆளுநர் ஆய்வு செய்வதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆளுநர் செல்லும் மாவட்டங்களில் திமுகவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால் ஆளுநர் உரையாற்றும்போது அவருக்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்து அவையைப் புறக்கணிக்கும் எனத் தெரிகிறது. இதே நிலைப்பாட்டில் காங்கிரஸýம் இருந்து வருகிறது. பேரவையில் எத்தகைய நிலைப்பாடுகளை எடுத்துச் செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.

எத்தனை நாள்கள்? ஆளுநர் உரையாற்றி பேரவையைத் தொடங்கி வைத்த பின் சட்டப் பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் கூடவுள்ளது. அதில், கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்தலாம் என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்.

முக்கியப் பிரச்னைகள்: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஒக்கி புயல் பாதிப்பு நிவாரணப் பணிகள், ஆளுநர் ஆய்வு விவகாரம், இறக்குமதி மணல் விவகாரம், போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை உள்பட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் எழக்கூடும் என பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுயேச்சை எம்.எல்.ஏ.: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிமுக, திமுக வேட்பாளர்களைத் தோற்கடித்த டிடிவி தினகரன் முதல்முறையாக பேரவைக்கு வருகிறார். ஆளும்கட்சி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் டிடிவி தினகரன், பேரவையில் தனது கன்னிப் பேச்சை பேச உள்ளார். அப்போது, அதிமுகவினரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பேரவையில் அவருக்கு எந்த இடம் ஒதுக்கப்படும், அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பேசுவார்களா என பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்தக் கூட்டத் தொடர் காணவிருக்கிறது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.,க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை. இதனால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பேரவையில் தனது செயல்பாடுகளை டிடிவி தினகரன் அமைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழுக்களில் மாற்றம்: இதனிடையே, அதிமுகவைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும், பேரவையின் பல்வேறு குழுக்களில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் அந்தந்தக் குழுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக, அதிமுகவைச் சேர்ந்த பிற எம்.எல்.ஏ.,க்கள் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பேரவையில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி