என்னது இனி வருமான வரியே இல்லையா..!! மோடி அரசின் புதிய ஐடியா..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2018

என்னது இனி வருமான வரியே இல்லையா..!! மோடி அரசின் புதிய ஐடியா..!

மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது நாள் முதலே பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது,இதில் சில முக்கியமான திட்டங்கள் பேச்சுவார்த்தை உடனேயே முடங்கிப்போனது, ஆனால் ஒரு திட்டம் மட்டும் இன்னமும் சூடு குறையாமல் இருக்கிறது.
ஆம், மோடியின் ஆட்சிக்கு வந்த உடனேயே பிஜேபி கட்சியைச் சேர்ந்த பல முன்னணி தலைவர்கள் தனிநபர்கள், மாத சம்பளக்காரர்கள் செலுத்தும் வருமான வரி முறையை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தை முன்வைத்தனர். 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது இத்திட்டம் மீண்டும் அரசு அதிகாரிகள், மக்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தனிநபருக்கான வருமான வரியை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் எனப் பிஜேபி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி முதல் ஆர்த்கிரான்தி-யின் அனில் போகில் ஆகியோர் வரையில் பலரும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் முன்னணி பொருளாதார வல்லுனரான சுர்ஜித் பாலா, தற்போது இருக்கும் பல கட்ட வருமான வரி விதிப்பை முழுமையாக நீக்கிவிட்டு ஒற்றை வரி விதிப்பைக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் மாதத்தில் அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை ஆர்த்கிரான்தி-யின் அனில் போகில் பரிந்துரையின் படியே செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் மோடி அரசு ஆர்த்கிரான்தி அமைப்பின் பரிந்துரையான தனிநபர் மீதான வருமான வரியை நீக்கம் என்பதையும் அமலாக்கம் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய அமைத்த மோடி அரசு, தற்போது 50 வருடப் பழமையான வருமான வரிச் சட்டத்தை இன்றைய நடைமுறைக்கு மாற்றும் பணியில் இறங்கியுள்ளது. 5 மாத தொடர் ஆய்வுகளுக்குப் பின் அடுத்தச் சில வாரங்களில்ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். தனிநபர் வருமான வரி நீக்கம் அல்லது ஒற்றை வரி விதிப்பு முறை ஆகியவற்றுக்குக் குறித்து முடிவுகள் 5 மாத ஆய்வுகளின் முடிவுகளை வைத்தே முடிவு செய்யப்பட உள்ளது. ஆனால் 2018-19ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் நேரடி வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவது மிகவும் கடினமாக உள்ளது. இந்நிலையில் நாட்டின் மொத்த ஜிடிபியில் 2 சதவீத தொகை தனிநபர் வருமானவரி மூலம் கிடைக்கிறது. இது இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு 2 சதவீத தனிநபர் வருமான வரி என்பது மிகவும் குறைவு.இந்தியாவில் வருமான வரிச் செலுத்துவோர்களில் அதிகமானோர் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இவர்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருமான வரியைச் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வருமான வரியை இழப்பதன் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருவாய் இழப்பு ஏற்படும், ஆனாலும் மக்களின் கையில் பணம் புழக்கம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து நாட்டின் தேவையும் வளர்ச்சியும் அதிகரிக்கும் எனப் பலர் விவாதம் செய்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் சேமிப்பின் அளவும் அதிகரிக்கும்.தனிநபருக்கான வருமான வரி நீக்கப்பட்டால் அரசின் வரி வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி, கருப்புப் பணத்தைக் கண்டறிதல் ஆகியவற்றில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இப்படி உருவாகும் வேலைவாய்ப்புகளுக்குச் சம்பளம் குறைவாக இருந்தாலும், நிறுவனங்கள் அதிகமான மக்களைப் பணியில் அமர்த்தும் முயற்சியில் இறக்கும். வரி இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் தங்களது பணத்தை வங்கியிலேயே வைக்கும் காரணத்தினால் வங்கிகளின் நிலை மற்றும் வருமானம் மேலும் அதிகரிக்கும். இதுமட்டும் அல்லாமல் வங்கிகளில் வைப்பு மற்றும் கடன் அளிப்பு அளவுகளும் அதிமாக இருக்கும். மோடியின் 3 ஆண்டு ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது என மக்கள் கூறியது, குஜராத் தேர்தலில் குறைந்தபட்ச வித்தியாச அளவில் அவர் வெற்றிபெற்றது மூலம் பிஜேபி மற்றும் மோடியின் நிலையில் தெளவிவானது. இத்தகைய சூழ்நிலையில் 2019ஆம் ஆண்டுப் பிஜேபி பொதுத் தேர்தலை சந்திக்க உள்ளது.இந்நிலையில் தனிநபருக்கான  வருமான வரியை முழுமையாக  நீக்கம் பற்றிய அறிவிப்பு மோடி அரசால் அறிவிக்கப்பட்டால், கண்டிப்பாக 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்த ஒற்றை அறிவிப்பின் வாயிலாக மோடி அரசு சந்திக்கும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, உற்பத்தித் துறையில் இருக்கும் தொய்வு, சேவைத் துறையில் உள்ள மந்த நிலை, மக்களின் மன நிலையில் என அனைத்தையும் மீட்டு எடுக்க முடியும். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி