உதவித் தலைமையாசிரியர் பதவியை தவிர்க்கும் ஆசிரியைகள்! தலைமையாசிரியர் பொறுப்பில் தடுமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2018

உதவித் தலைமையாசிரியர் பதவியை தவிர்க்கும் ஆசிரியைகள்! தலைமையாசிரியர் பொறுப்பில் தடுமாற்றம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் பதவியை பெண் ஆசிரியர்கள் தவிர்த்து வருவதால், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறும்போது அவர்கள் சிறப்பாக பணிபுரிய முடியாமல் தடுமாறும் நிலைஉள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 35,631 தலைமையாசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில், 750 மாணவர்கள் படிக்கும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே உதவித் தலைமையாசிரியர் பணியிடம் வழங்கப்படுகிறது. உதவித் தலைமையாசிரியர் பணியிடத்திற்கு மாத ஊதியத்துடன் ரூ.50 மட்டுமே சேர்த்து வழங்கப்படுகிறது. 750 மாணவர்களில் ஒருவர் குறைந்தாலும், அந்தப் பள்ளிக்கு உதவித் தலைமையாசிரியர் பதவி வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்பட்சத்தில், இடை நிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மூத்த ஆசிரியர் என்றே அழைக்கப்பட வேண்டும்.தலைமையாசிரியர்களுக்கு வாரம் 10 பாட வேளை வழங்கப்படுவதைப் போல், உதவித் தலைமையாசிரியர்களுக்கு 14 பாட வேளை என்பது விதிமுறை. தமிழகம் முழுவதுமுள்ளஅரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், உதவித் தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியிருந்தும் பெரும்பாலான பெண் ஆசிரியர்கள் விருப்பம் காட்டுவதில்லை. சில இடங்களில் ஆர்வத்துடன் முன்வரும்பெண் ஆசிரியர்களை, நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ள முடியாது எனக் கூறி சக ஆசிரியர்களே தடுத்து நிறுத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், பதவி மூப்பு அடிப்படையில் 4ஆவது, 6ஆவது இடங்களில் இருக்கும் ஆண் ஆசிரியர்கள் அந்த பதவியை பெற்றுக் கொள்கின்றனர்.அதுபோல் உதவித் தலைமையாசிரியர் பதவிக்கு வரும் ஆண் ஆசிரியர்கள் பலர், பள்ளியில் உள்ள அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் செய்ய வேண்டிய பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். குறிப்பாக மாத சம்பளப் பட்டியல் தயாரிப்பு, ஊதியம், ஈட்டிய விடுப்புமற்றும் ஊக்க ஊதியம் பெறுவதற்கு கருவூலம் செல்வது, பள்ளி நிர்வாகப் பணி, விழா நடத்துதல் போன்ற பணிகளை செய்துவிட்டு, ஆசிரியரின் அடிப்படை பொறுப்பான கற்பித்தல் பணியை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் அதிகரித்து வருகிறது.

இதனால், பள்ளியில் வேலை செய்ய வேண்டிய அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்கள், தலைமையாசிரியரின் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.இதுபோன்ற காரணத்தால், பதவி உயர்வு பெற்று தலைமையாசிரியர் பணியிடத்திற்கு வரும் பெண் ஆசிரியர்கள், முறையான அனுபவம் இல்லாமல் தடுமாறும் நிலை உள்ளது. அதனால், உதவித் தலைமையாசிரியர்களாக உள்ளஆண்களிடமே அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, பெயரளவுக்கு தலைமையாசிரியராக பணியாற்ற வேண்டிய நிலை பெண் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: உதவித் தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியான மூத்த பெண் ஆசிரியர்களிடம்,அந்த பொறுப்பு வேண்டாம் என நிர்ப்பந்தம் செய்து ஒப்புதல் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்று எழுதிக் கொடுக்கும் பெண் ஆசிரியர்களின் பெயர்களை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தலைமையாசிரியருக்கான பதவி உயர்வு பட்டியலிலும் அந்த பெண் ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமே, உதவித் தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து பெண் ஆசிரியர்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியும். அதன் மூலம், நிர்வாகத் திறமை மிக்க தலைமையாசிரியர்களாக பெண் ஆசிரியர்களை உருவாக முடியும் என்றார்.

கட்டாயத் தகுதியாக மாற்றப்படுமா?

தேர்வு நடத்துதல், கற்றல் திறன் ஆய்வு, மாணவர்கள் விவரம், அரசு அனுப்பும் நலத்திட்டங்கள், பதிவேடு பராமரிப்பு, பள்ளி நிர்வாகம் போன்ற பணிகள் தலைமையாசிரியரின் முக்கிய பணியாக உள்ளது. இதுதொடர்பான அனுபவங்களைப் பெறுவதற்கு உதவித் தலைமையாசிரியராக பணியாற்ற வேண்டியதும் அவசியம்.

இதனைக் கருத்தில் கொண்டு, உதவித் தலைமையாசிரியர் பணியிடத்தின் அனுபவத்தை, தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியலில் கட்டாயமாக சேர்ப்பதற்கு அரசு முன்வர வேண்டும். அதேபோல் உதவித் தலைமையாசிரியர் பணியிடத்திற்கு ரூ.50 மட்டும் கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த தொகையையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமையாசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி