தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2018

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது!


தீபாவளிக்கு தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பட்டாசு வெடிப்பதற்கான நேரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 23-ஆம் தேதி அளித்த தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30) விசாரணை நடைபெறவுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கான விவகாரத்தில் அக்டோபர் 23-இல் உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பில், தீபாவளி, பிற விழாக் காலங்களில், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 -10 மணி வரையிலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றின் போது நள்ளிரவு 11.55-12.30 மணி வரையிலும் அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் பி. வினோத் கன்னா விளக்கம் கோரும் மனுவை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அதில், பல்வேறு பாரம்பரியங்களையும், பண்பாடுகளையும் கொண்ட இந்தியா, கூட்டாட்சி நாடாக உள்ளது. தீபாவளியைப் பொருத்தவரையிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள் உள்ளன. வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை இரவிலும், தமிழகத்தில் அதிகாலையிலும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினத்தில் தமிழகத்தில் மக்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை அதிகாலையிலேயே கொண்டாடத் தொடங்குகின்றனர். தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டம் நாள் முழுவதும் இருக்கும்.

இந்நிலையில், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் என விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால் பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். மேலும், இந்தக் கட்டுப்பாடு ஓரே நேரத்தில் அதிக அளவில் புகை உருவாக வழி வகுக்கும். எனவே, தமிழகத்தில் அதிகாலை 4.30-6.30 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் இரண்டு வெவ்வேறு நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் விளக்கம் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் வெடி வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம்.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பதில் நீதிமன்றம் தெளிவாக உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.


9 comments:

  1. இன்று உள்ள சூழலில் இது ஏற்ககூடிய தீர்ப்பு.புவி வெப்பம்மையம் ஆதலால் இது சரியானது. மேலும் பட்டாசு வெடிக்கும் அளவு குறையும் என்பதால் மாசுகட்டுபடுத்தப்படும்.

    ReplyDelete
  2. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  3. The total crackers you buy for Deepavali, you will be bursting it from morning till night. But now the same crackers you are going to burst in just 2 hours. Whats the difference? Anyway the same pollution!

    ReplyDelete
  4. வட இந்தியா காரன் தீபாவளிக்கு வெடி போட மாட்டான், அவனுக்கு வேற நாள் இருக்கு, ஆனா நமக்கு என்ன ??
    சரி அப்போ புகை வருதுனா எதுக்கு ரோட்டுல கார் பைக் எல்லாமே போகணும், எல்லாரையும் பஸ்ல போக சொல்லி தடை பண்ண முடியாதா? trainல போக சொல்லி கட்டாய படுத்தலாமே, என்ன சட்டம் இது, கோர்ட்டாவது இதுவாவது ஒரு மகான் சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது, மொத்தமா எல்லாரும் வெடிச்சா என்னா பண்ண முடியும், எல்லாரையும் ஜெயில்ல போட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. நாட்டுக்கு நல்லதா சில விஷயங்கள் செய்யும் போது, உடனே இப்படி கிளம்பிவிடுவீர்களே. Co2 வெப்பமயமாதலுக்கு காரணம் என்றால், தொழிற்சாலைகளை கட்டுப்படுத்துவார்கள், இப்படி வெடி வெடிப்பதை கட்டுப்படுத்துவார்கள். நீங்கள் மூச்சுவிடக் கூடாதென சட்டம் போட்டால் நல்லாயிருக்குமா? போகிக்கு tyre கொளுத்த வேண்டாம் என சட்டம் சொன்னால் ஏற்போம. போகிக்கு கொளுத்தவே வேண்டாம் என்றாலும் ஏற்போம். வெடி வேண்டாமெனில் ஏற்போம். தயவு செய்து குதற்கமாகப் பேசுவதை விட்டு கொஞ்சம் மாசுக்கட்டுபாட்டை கடைபிடிப்போம்

      Delete
    2. ஐயா எனக்கு கடவுள் நம்பிக்கை கூட இல்ல, தீபாவளி எல்லாம் நான் கொண்டாடுறதும் இல்ல, ஆனா வருஷத்துக்கு ஒரு தடவ தான் அது வருது
      அன்னைக்கு தான் எல்லா சின்ன பசங்களும் வெடி வைக்கிறாங்க, ஒரு பண்டிகை, அதுல வெடி வெடிக்கிறது தான் நம்ம ஆசை,
      அத போய் தடை பண்ணாதிங்க, வருஷம் முழுக்க இங்க எவனும் வெடிக்கல, ஒரே ஒரு நாள் தான், அதனால என்ன வர போகுது, அந்த தொழில நம்பி எவ்ளோ குடும்பம் இருக்கு,
      யோசிச்சு பாருங்க, சும்மா சுற்று சூழல் அது இதுன்னு சப்ப கட்டு காட்டாதிங்க, மாசு எங்க தான் இல்ல, மாசு இல்லாம உலகம் இருக்கனுன்னு நெனச்சா நாம திரும்ப ஆதிவாசி மாதிரி தான் போய் வாழனும்,
      ஒருநாள் வெடிக்கிரதுல ஒன்னும் பூமி அழிய போறது இல்ல, அது ஏற்கனவே அழிஞ்சுட்டு வருது, இது எல்லாம் ஒரு சதவீதம் கூட இல்ல,

      Delete
  5. டில்லி காரன் எப்போ பாரு முகத்தில் துணி கட்டிக்கொண்டு அலைவதைப் போல நாமும் அலைய வேண்டாம் என நினைத்தால், கொஞ்சம் பட்டாசு வெடிக்காமல் தியாகம் செய்யுங்கள். உடனே உரிமை, வெங்காயம் எனக் கிளம்ப வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி