வேலைவாய்ப்பை எளிதாக்க பிளஸ் 2-வில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 20, 2019

வேலைவாய்ப்பை எளிதாக்க பிளஸ் 2-வில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி


மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பள்ளி விழாவில் பேசுகிறார், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

வேலைவாய்ப்பை எளிதாக்கும் வகையில், பிளஸ் 2 பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இணைக்கப்பட உள்ளது என்றார் தமிழக பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் 78-ஆவது ஆண்டு விழாவில் அவர் பேசியது:எதிர்கால இந்தியாவின் சிற்பிகள் மாணவர்கள். அவர்கள் கல்வி மற்றும் சமூகச் சூழலில் உயர்வடைய அரசு முயற்சி எடுத்து வருகிறது. 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 15 லட்சம் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் மார்ச் இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது. சுயநிதிப்பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவாக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்திற்கு இந்த கோரிக்கை கொண்டு செல்லப்படும்.8 முதல் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியோடு ஸ்மார்ட் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணச் சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நம் நாட்டில் பொறியியல் முடித்த 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். எனவே, தமிழக மாணவர்கள் எளிதாக வேலைவாய்ப்பு பெறும் வகையில், பிளஸ் 2 பாடத்திட்டத்துடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாத வகையில் பணியிடங்கள் நிரப்பப்படும். சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் மனநிலையை மாணவர்களிடம் உருவாக்கும் வகையில், மாணவர்கள் மரக்கன்று நட்டுப் பராமரித்தால் மதிப்பெண்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

யூ டியூப்பில் கல்வித்துறை விடியோக்களைப் பதிவேற்றுவதன் மூலம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். பள்ளிக் கல்விக்கான சிறப்பு தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட உள்ளது என்றார் அவர்.விழாவில், மேலப்பாளையம் முஸ்லிம் கல்வி கமிட்டி செயலர் எல்.கே.எஸ். முஹம்மது மீரா முகைதீன் தலைமைவகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

நீட் தேர்வுக்கு கூடுதல் கவனம்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அளித்த பேட்டி:அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் அதிகம் பங்கேற்று வெற்றி பெற ஏதுவாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களில் பிளஸ் 2 பயின்று வரும் 16 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.அவர்களில் சிறந்த 4 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அந்த மாணவர்களுக்கு மே மாதம் 10 கல்லூரிகளில் 25 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். உணவு, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்படும்.

நீட் தேர்வு மையங்களை அமைப்பதற்காக 550 பள்ளிகள் தயார்நிலையில் உள்ளதாகக் கூறி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், பட்டய கணக்கர்களுக்கான (ஆடிட்டர்கள்) தேவை அதிகரித்துள்ளது. வணிகவியல் படிக்கும் மாணவர்களை சி.ஏ. படிக்க ஊக்கப்படுத்தும் வகையில்,சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி