தமிழகம் முழுவதும் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல், விளையாட்டுகளில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் முடக்கப்படுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2019

தமிழகம் முழுவதும் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல், விளையாட்டுகளில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் முடக்கப்படுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை


தமிழகம் முழுவதும் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல், விளையாட்டுகளில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் முடக்கப்படுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் வேதனைதெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 358 பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருபாலர் பள்ளிகள் அரசு பெண்கள் பள்ளி, ஆண்கள் பள்ளி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 2500க்கும் மேற்பட்டவை உருவாகியுள்ளன. இந்நிலையில், இதுபோன்று பிரிக்கப்பட்ட பள்ளிகளில் மாணவிகளின் விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொள்ள விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. இதனால், விளையாட்டில் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாமல் மாணவிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் போதிய விளையாட்டு மைதானங்கள் இல்லை என்று விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல், 75 சதவீதத்துக்கும் மேலான அரசு பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் இல்லை என்பதும் குற்றச்சாட்டு.

விளையாட்டில் மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் தலா ரூ.1 பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகஅதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல், பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கவும் மாணவர்களுக்கு தலா ரூ.1 வீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், போதிய நிதியின்றி அரசு பள்ளி நிர்வாகங்கள் தள்ளாட்டம் கண்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி விதிப்பு ஆகியவற்றால் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி போதுமானதாக இல்லை என்று நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால், அரசு பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நூலக புத்தகங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதி, வேறு செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அரசு பள்ளி நூலகங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் வாங்கப்படவில்லை. மேலும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதும் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, அரசு பள்ளிகளுக்கு மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. மேலும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படாமல் இருந்து வருகிறது. நூலகம், விளையாட்டு உபகரணங்களுக்காக பயன்படுத்த வேண்டியநிதி வேறு செலவினங்களுக்கு பயன்படுத்தப்படுவதாககூறும் அதிகாரிகள், அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் இருப்பது கல்வித்துறை அதிகாரிகளின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக கல்வி ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.சமீபத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாதிரி பள்ளி தேர்வு செய்யப்பட்டது.

இந்த பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த தலா ரூ.50 லட்சம் வீதம் 32 பள்ளிகளுக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று அனைத்து பள்ளிகளையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. இதுதவிர தனித்திறமைகளான உடற்கல்வி, ஓவியம், இசை, வாழ்க்கைக்கல்வி ஆகியவற்றை கற்பிக்க சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும் சிறப்பு ஆசிரியர்கள் ரூ.7,700க்கு தற்காலிகமாகவே பணிபுரிந்து வருகின்றனர். இதனால்,பல்வேறு பணியிடங்கள் காலியாகிவிட்டது. அதன்படி, 16 ஆயிரத்து 656 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், 12 ஆயிரத்து 500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

இதுபோன்று காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதோடு, பள்ளிகளுக்கான நிதியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. கல்வித்துறையில் புதிய திட்டங்களை வகுப்பதோடு, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அவைகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யதீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள். இதன் மூலம் மாவட்ட, மாநிலஅளவில் சாதிக்கும் பெரும்பாலான அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதலிடம் பிடிப்பார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நரிக்குறவ மாணவர்களுக்கு துப்பாக்கி பயிற்சிமீன் குஞ்சுக்கு நீந்த கற்பிக்க தேவையில்லை என்றசொல் வழக்கு உண்டு. அதற்கேற்ப பரம்பரை பரம்பரையாக சில திறமைகள் ஒருவரின் வழிவழியாக தொடர்வதுண்டு. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நரிக்குறவர்களுக்கு வேட்டையாடும் திறமை இயற்கையாக இருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அவர்கள் வில்குண்டு, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை பயன்படுத்துவதில்சிறந்து விளங்குகின்றனர். தற்போது, நரிக்குறவர்களது வாரிசுகள் பள்ளிகளில் படிக்க வருகின்றனர். இவர்களுக்காக தனியாக பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சிகளை பள்ளிகளில் வழங்கினால் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாய்ப்புள்ளது. இதேபோல், மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பள்ளிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி