பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2019

பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்


பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கவுள்ளது.  தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களைக் கண்காணிக்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 தேர்வு கடந்த 2017-ஆம்  ஆண்டு வரை பள்ளிஅளவிலான சாதாரண ஆண்டுத் தேர்வாகவே நடத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு 2017-18 கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும்என அரசு அறிவித்தது. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை  வெளியிட்ட செய்தி:  

தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8, 16, 618 மாணவ,  மாணவிகள் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21,650 பேர் புதிய பாடத் திட்டத்தில் தேர்வெழுதவுள்ளனர்.  இதில் மாணவிகள் 4, 41, 693 பேர்; மாணவர்கள் 3, 74, 925 பேர் ஆவர்.   தனித்தேர்வர்களில் 2,702 பெண்களும், 2, 329 ஆண்களும்,  ஒரு திருநங்கையும் தேர்வெழுதவுள்ளனர்.

பழைய பாடத் திட்டத்தில்...

கடந்த ஆண்டு மார்ச்  மற்றும் ஜூன் மாதங்களில் பிளஸ் 1 பொதுத்தேர்வினைபழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் தற்போது பிளஸ் 2 பயிலும் 84, 332 பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை பழைய பாடத் திட்டத்திலேயே மீண்டும் மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத்தேர்வின்போது தேர்வெழுதவுள்ளனர்.  அதேபோன்று கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக தேர்வெழுதி தேர்ச்சி பெறாத 690 தேர்வர்கள் தற்போது பழைய பாடத்திட்டத்திலேயே பிளஸ் 1 பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். நிகழாண்டு தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 4, 54, 552 ஆகும். சென்னையில் 410 பள்ளிகளில் இருந்து 47, 305 மாணவ, மாணவிகள் 156 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 149 பள்ளிகளிலிருந்து  14, 985 மாணவ, மாணவிகள் 40 மையங்களில் தேர்வில் பங்கேற்கின்றனர்.  தமிழகத்தில் வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் சிறைகளைச் சேர்ந்த 78 ஆண் சிறைவாசிகள் சென்னை புழல் மத்தியசிறையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள்:

 டிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள்,  கண் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் அனைவருக்கும் சொல்வதை எழுதுபவர் நியமனம்,மொழிப் பாட விலக்களிப்பு,  கூடுதல் 50 நிமிஷங்கள் ஆகியவை உள்பட அவர்கள் கோரிய சலுகைகள்2, 700 தேர்வர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும் அவர்களுக்கு தேர்வு மையங்களிலேயே தரைத் தளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.  தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்காக 2,914 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு பணிகளில்...

அறைக் கண்காணிப்பாளர்களாக 45,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டங்களில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, கோட்டாட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக்  பள்ளி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி