பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்தப் போவது யார்?-  அறிவிப்பு வெளிவராததால் பிளஸ் 2 மாணவர்கள் குழப்பம் - kalviseithi

Mar 28, 2019

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்தப் போவது யார்?-  அறிவிப்பு வெளிவராததால் பிளஸ் 2 மாணவர்கள் குழப்பம்


பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விலகியுள்ள நிலையில், இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை யார் நடத்தப் போவது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வராததால் பிளஸ் 2 மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 580-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.

இக்கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தலைவராக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் இருந்து வந்தார். இந்நிலையில், அப்பொறுப்பி லிருந்து தற்போதைய துணை வேந்தரான எம்.கே.சூரப்பா அண்மையில் விலகினார். அவரது வேண்டுகோளை உயர்கல்வித் துறையும் ஏற்றுக்கொண்டது. கலந்தாய்வுப் பணிகள் கார ணமாக பல்கலைக்கழகத்தின் கல்விப் பணிகள் பாதிக்கப் படுவதால் அப்பொறுப்பிலிருந்து விலகியதாக துணைவேந்தர் தரப் பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவில் கூடுதலாக இணைத் தலைவர் என்ற பதவியை உருவாக்கி அதில் தொழில்நுட்பக் கல்வி ஆணையரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்த காரணத்தால் துணைவேந்தர் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.

மாணவர் சேர்க்கைக் குழுவின் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் நியமிக்கப்பட்டிருப்பதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககமே நடத்தும் என்ற நிலையும் உருவாகியுள்ளது. ஏப்.19-ல் பிளஸ் 2 தேர்வு முடிவு: பிளஸ் 2 தேர்வுகள் முடி வடைந்து விடைத்தாள் மதிப் பீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கமாக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு தொடர்பான ஆன்லைன் பதிவு விவரங்கள் மார்ச் மாதத்திலேயே அறிவிக்கை மூலம் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் நிலையில், அது தொடர்பான அறிவிப்பு ஏதும் வராததால் பிளஸ் 2 மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துமா அல்லது தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொள்ளுமா, ஆன்லைன் கலந்தாய்வு முறை தொடருமா என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக வட்டாரத்தில் விசாரித்தபோது, “பொறியியல் கலந்தாய்வை நடத்தப் போவது யார் என்பது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி