வட தமிழக கரையை நோக்கி புயல் நகரக் கூடும்; கடலோர தமிழகம், புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’: அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2019

வட தமிழக கரையை நோக்கி புயல் நகரக் கூடும்; கடலோர தமிழகம், புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’: அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற்று, வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்பதால், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வுமையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை செய்திக்குறிப்பு:

இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (ஏப்.25) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. தற்போது வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று,அதே பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.மேலும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று, 30-ம் தேதி, இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதி வழியாக வட தமிழகக் கரையைக் கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.

இந்த புயல் சின்னம் காரணமாக, 28-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-ம் தேதி பெரும்பாலான பகுதிகளில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி பெரும்பாலான பகுதிகளில் மழை, சில இடங்களில் கன முதல் மிககனமழை, ஓரிரு இடங்களில் அதிகனமழை (20 செமீ-க்கு மேல்) பெய்யக்கூடும்.பலத்த காற்றுகாற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வருவதன் காரண மாக தென்கிழக்கு வங்கக் கடல்பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கும். 28-ம் தேதி இலங்கை கடலோரப்பகுதியில் சுமார் 100 கிமீ வேகத்திலும், 29-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் 115கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலச்சந் திரன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று வட தமிழக கரையைநோக்கி நகரக்கூடும். அதனால் மீனவர்கள், 26-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 27மற்றும் 28-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

தன்னார்வ அடிப்படையில் வானிலையை கணித்து கூறி வரும் வானிலை ஆர்வலர் ந.செல்வகுமார் கூறியதாவது:இந்தப் புயல் வட தமிழக பகுதியில் கரையைக் கடந்து, ஆந்திரா நோக்கிச் சென்று, மீண்டும் கடலில்இறங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்குமென எதிர் பார்க்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் ஒடிசா கரையோரம் நிலவும் எதிர் புயல் தாக்கத்தால், புயல் கரையைக் கடக்கும் இடம் மாறவும் வாய்ப்புள்ளது.இந்தப் புயலால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும். இது தமிழகத்துக்குள் நுழைந்து மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என்பதால், திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைஆணையர் சத்யகோபால், புயலை எதிர்கொள்ள அனைத்துஏற்பாடுகளையும் செய்ய வேண்டும், நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கியுள்ளதாக அத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி