தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் மத்திய அரசு திட்டவட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2019

தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் மத்திய அரசு திட்டவட்டம்


தமிழகத்தில் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட 5 ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறையின்கீழ் செயல்படும் இந்திய மருத்துவ முறை குழுமம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுசம்பந்தமாக தமிழக அரசு எந்த அறிவிப்பும்வெளியிடாததால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளைப்போல் இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்,சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம்கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு 3 முறை கடிதம் எழுதியது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவானதால், கடந்த ஆண்டிலேயே நீட்தேர்வு எழுதி ஏராளமானோர் தகுதி பெற்றனர்.

இந்த நிலையில், ஆயுஷ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ‘தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படை யிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்’ என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படியே, கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தது. கடைசி நேரத்தில் முதல்வரின் இந்த அறிவிப்பால் நீட் தேர்வில்தகுதி பெற்ற மாணவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் குழப்பம் இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த டிசம்பரிலேயே முடிந்துவிட்டது. வரும்மே 5-ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. ஆனால், ஆயுஷ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதை தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இதனால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மாணவர் களின் பெற்றோர் கூறியதாவது: கடந்த ஆண்டில் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்றனர். அதனால், மாணவர்கள் பிளஸ் 2 பாடங்களை விட்டுவிட்டு, நீட் தேர்வில் அதிக கவனம் செலுத்தினர். நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்ணும் பெற்றனர். நீட் தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தியதால், பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்தது. கடைசி நேரத்தில், ‘பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது’ என்று முதல்வர் அறிவித்தார். இதனால், கஷ்டப்பட்டு படித்து நல்லபடியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களால் கடந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளில் சேர முடியவில்லை.இந்நிலையில், இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. மாணவர்கள் நலனைப் பற்றி தமிழக அரசு சிறிதும் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆண்டு நீட் கட்டாயம் தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்று கேட்டதற்கு, இந்திய மருத்துவ முறை குழும (Central Council of Indian Medicine) அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு முதலே ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. அனைத்து மாநிலங்களிலும் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்தது. ஆனால், ஆயுஷ் அமைச்ச கத்தின் இந்த அறிவிப்புதொடர் பாக இந்திய மருத்துவ முறை குழுமம் திருத்தம் செய்யவில்லை. இதை காரணம் காட்டியதமிழக அரசு, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தியது.

இந்நிலையில், ஆயுஷ் படிப்புக ளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டது தொடர்பாக இந்திய மருத்துவ முறை குழுமம் உரிய திருத்தங்களை செய்துள்ளது. எனவே, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

  1. Neet exam ku padicha epdi pa 12th board la Mark varama pogum,coz anga biology matum than padikka solli emathuranga, physics and chemistry neet ku olunga padikirathu illa. Ana board exam ku ellame padikanum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி