ஒளிரும் ஆசிரியர் - 1 - kalviseithi

May 17, 2019

ஒளிரும் ஆசிரியர் - 1


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வம் மற்றும் தொண்டுள்ளத்துடன் பணிபுரிந்து வந்து தம்மைப் பற்றி வெளியுலகிற்கு அதிகம் விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து ஆழ்ந்த அமைதியோடு ஓயாத உழைப்பை மேற்கொண்டு வரும் ஆசிரியப் பெருமக்களின் தனித்த அடையாளங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த விழைவதே இங்கு தலையாய நோக்கமாகும்.

          அந்த வகையில் இப்போது நாம் அறியவிருக்கும் ஒளிரும் ஆசிரியை திருமதி மாலா ஆவார். இவர் தற்போது தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பள்ளியானது நம் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் கோரையாற்றின் கரையில் அமைந்துள்ள சித்தாம்பூர் ஶ்ரீராமகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஆகும். சற்றேறக்குறைய இருபத்தைந்து ஆண்டு காலமாக இப்பள்ளியில் இவர் பள்ளி, மாணவர், சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பள்ளி நிர்வாகி திருமிகு நா.மதிவாணன் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து தம் சொந்தப் பணத்தைப் பல்வேறு  அடிப்படை வசதிகளுக்குத் தன்னலம் பாராமல் செய்து வருவது வியப்பானது.               
             குறிப்பாக, கடந்த 2012 ஆம் ஆண்டில் ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பிலான ஆழ்குழாய் கிணற்றுடன்கூடிய குடிநீர் வசதி ஏற்படுத்தித் தந்ததும் பிற்காலத்தில் ரூபாய் இருபதாயிரம் நிதியுதவியுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் நிறுவியதும் அனைவராலும் பாராட்டப்பட்ட நிகழ்வுகளாவன. ஏனெனில், அரசின் நிதியுதவி அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே! அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அல்ல. தம் சொந்த பொறுப்பில்தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவலநிலை.
           அதுபோல் தம் உறவினர்கள் மூலமாகத் திரட்டப்பட்ட ரூபாய் ஐம்பத்தைந்தாயிரம் நிதியுதவியைக் கொண்டு இரும்புக் கம்பி வேலி அமைத்துப் பள்ளிப் பாதுகாப்பை உறுதி செய்ததும் கஜா கோரப்புயலில் வீழ்ந்த 
மரங்களை வீணாக்காமல் மேலும் மரங்கள் வாங்கி பள்ளித் தளவாடப் பொருள்களான மேசை, நாற்காலி, இருக்கைகள் என ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பில் உணர்வுப்பூர்வமாகச் சொந்தமாகச் செலவழித்து உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் தம் அன்புக்கணவரின் பிறந்த நாளில் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 
          கற்பித்தலில் தொடர்ந்து புதுமைகளையும் இனிமைகளையும் புகுத்திக் கற்றலை நிலைப்படுத்தி வருவது இவரது தனித்திறனாகும். குழந்தை மையக் கற்றல் முறைக்கு அடிப்படையாக விளங்கும் விளையாட்டு மற்றும் செய்து கற்றல் முறைகள் மூலமாகவே இவரது கற்பித்தல் பணி அமைந்துள்ளது. தொடக்க நிலையிலேயே நல்ல குடிமைப்பண்புப் பயிற்சியைக் குழந்தைகள் பெற்றிடவும் எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உருவாகிடவும் மாதிரி தேர்தல் மற்றும் மாணவர் பாராளுமன்றம் நிறுவும் நடவடிக்கையினை இதற்கு சான்றாகக் கொள்ளலாம்.
          
          ஆங்கில வாசிப்பை மேம்படுத்த சரியான ஒலிக்குறிப்பு அட்டை பயிற்சி, கணித அறிவை வளர்த்துக்கொள்ள தம் மகனது அபாகஸ் மற்றும் பயிற்சித் தாள்களைக் கொண்டு பயிற்சி, விதை முளைத்தல் உள்ளிட்ட எளிய சோதனைகள் மூலம் அறிவியல் மனப்பான்மைக்கான பயிற்சி, அஞ்சலகம், வங்கி உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படும் படிவங்களைப் பூர்த்தி செய்ய பயிற்சி, தன்சுத்தம் பேணும் கைகழுவுதல் பயிற்சி, தமிழ் வாசிப்பை அதிகரிக்க சொல்வதெழுதுதல் மற்றும் வாக்கியம் அமைத்தல் பயிற்சி முதலானவை வாயிலாக நல்ல தரமான மாணவர்களை உருவாக்கும் பெருமுயற்சியில் இவரது பங்கு அளப்பரியது.
          தற்போது நவீனப்படுத்தப்பட்டுள்ள பாடப்புத்தகத்தில் அமைந்துள்ள விரைவுக் குறியீட்டு முறை கற்றலை வலுப்படுத்தும் பொருட்டு இணைய வசதியுடன் கூடிய மடிக்கணினி மற்றும் கம்பியில்லா ஒலிப்பெருக்கி வாயிலாகக் கற்றலில் நவீனத் தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரித்து, தம்மையும் அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள முயன்று வருவது போற்றத்தக்க ஒன்றாகும். தற்போது சார்லட் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வகுப்பறையை மெய்நிகர் வகுப்பாக உருவாக்கிடும் வகையில் திறன்மிகு தொலைக்காட்சிக் கருவி மற்றும் தொடர் மின் தேவைக்குதவும் மின்சேமிப்புக் கலன் ஆகியவற்றை பள்ளி  நிர்வாகியுடன் இணைந்து குக்கிராம பள்ளி மாணவர்களின் கற்றலுக்குத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுள்ளது இவரது அண்மைச் சாதனையாகும். 
          
          இதுதவிர, மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்க்கும் பொருட்டு சுற்றுச்சூழல் நாடகங்கள், வில்லுப்பாட்டு, நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தெருக்கூத்து, சேமிக்கப் பழகுவோம் ஓரங்க நாடகம், தேசிய அறிவியல் நாள் உள்ளிட்ட தேசிய விழாக்கள் மற்றும் ஆண்டு விழாக்கள் நடத்துவது இவரின் தொடர் நிகழ்வுகளாவன எனலாம். இதுபோன்று இவ் ஆசிரியையின் சீர்மிகு பணிகளை அடுக்கிக்கொண்டே இருக்க முடியும். ஏழை, எளிய மாணவர்களின் இருண்டுக் கிடக்கும் வாழ்க்கையில் வெளிச்சத்தை அனைத்து வகையிலும் பாய்ச்சி வளப்படுத்துவதை ஒற்றை குறிக்கோளாக எண்ணி மெழுகாய் உருகும் இந்த மாலா தலைமை ஆசிரியை மனித சமூகத்தின் ஒளிரும் ஆசிரியை தானே?!

ஆக்கம் : முனைவர் மணி.கணேசன்

நன்றி : திறவுகோல் மாத இதழ்

8 comments:

 1. ஸ்ரீ ஆறுமுகம் கல்வியியல் கல்லூரி தொழுதூர்(Po). திட்டக்குடியில் இயங்கிவருகிறது. 2019- 20 ஆம் கல்வியாண்டில் B.Ed சேரும் SC/ST மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி(FREE EDUCATION) வழங்கப்படுகிறது. குறைந்த இடங்களே உள்ளன முதலில் வருபவர்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும் தொடர்புக்கு A.செல்வராஜ் 9384101519

  ReplyDelete
 2. ஸ்ரீ ஆறுமுகம் கல்வியியல் கல்லூரி தொழுதூர்(Po). திட்டக்குடியில் இயங்கிவருகிறது. 2019- 20 ஆம் கல்வியாண்டில் B.Ed சேரும் SC/ST மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி(FREE EDUCATION) வழங்கப்படுகிறது. குறைந்த இடங்களே உள்ளன முதலில் வருபவர்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும் தொடர்புக்கு A.செல்வராஜ் 9384101519

  ReplyDelete
 3. All the best continue your procees

  ReplyDelete
 4. NET NTA NEW SYLABUS FULL NOTES AVAILABLE FOR ENGLISH CONTACT NO.8489243942

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி