புறக்கணிக்கிறது அரசு! - வேதனையில் ஆசிரியர்கள் - kalviseithi

May 3, 2019

புறக்கணிக்கிறது அரசு! - வேதனையில் ஆசிரியர்கள்


ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்க... பழைய ஓய்வூதிய முறையை உடனடியாக அமல்படுத்துக!' என்கிற கோஷங்களை முன்வைத்து, தமிழக ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாகத் தொடர் வேலைநிறுத்தத்தைக் கையில் எடுத்து நிகழ்த்திக் காட்டினாலும், அரசு இதுவரை ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வின் குளறுபடிகளால் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களின் அரசு வேலைகளை இழக்க உள்ளனர்.
.
மத்திய அரசு, குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை, 2010-ம் ஆண்டு கொண்டுவந்தது.

இந்த மசோதாவானது, 2011-ம் ஆண்டு தமிழகத்துக்கு நடைமுறைக்கு வந்தது. அதனடிப்படையில், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

தமிழகத்தில் 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் வெற்றிபெறுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் காலக்கெடுவானது கடந்த 2016-ம் ஆண்டோடு முடிவடைந்த நிலையில், அந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றுமுறை மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டதால், மீண்டும் 2019 மார்ச் 31 வரை ஆசியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடு நீடித்து வழங்கப்பட்டது. தற்போது இந்தக் காலக்கெடுவும் முடிந்துள்ளது.

ஆனால், தற்போதுவரை தமிழகத்தில் நான்கு முறைதான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம்தான் வெளியாகின. அந்தத் தேர்வுக்காக விண்ணப்பிப்பதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக, விண்ணப்பிப்பதற்கான காலநீடிப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே இந்தத் தேர்வானது, முறையான கால இடைவெளியில் நடத்தப்படாதது மிகப் பெரிய பிரச்னையாக உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட தேர்வுகளிலும் ஏற்பட்ட சிக்கல்கள் இருப்பது விமர்சனங்களுக்குள்ளாக்கின.

இந்த நிலையில், தகுதித் தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவானது முடிவடைந்துள்ளது. இதனால், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, பணியில் சேர்ந்து தகுதித் தேர்வில் வெற்றிபெறாத 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கான சம்பளம் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் அவர்களைப் பணியிலிருந்து நீக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், "இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் ஆசிரியர்கள் அல்ல... அரசு, தன்னுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் செய்துள்ள தவறுகள்தான். சரியான கால இடைவெளியில் தமிழக அரசு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தவில்லை என்பதுதான் இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணம். ஆசிரியர் தகுதித் தேர்வானது, ஆறு மாதங்களுக்கு ஒரு தேர்வு வீதம் தமிழகத்தில் 15 முறைத் தேர்வுகள் நடைபெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தகுதித்தேர்வுகள் இதுவரை 14 முறை நடந்துமுடிந்து, 15-வது தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை நான்கு முறை மட்டும்தான் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.

ஏற்கெனவே அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தும், அதற்கான எந்த நீதியும் இதுவரை கிடைக்கவில்லை. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாகவே உடனடியாகச் சிறப்புத் தேர்வை நடத்தச் சொல்லி பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், அப்போது அரசு அந்தப் பிரச்னையில் தீவிரம் காட்ட மறுத்துவிட்டது. ஒருபக்கம், உணவை உருவாக்கும் விவசாயிகளின் போராட்டங்கள்மீதும், மற்றொரு புறம் சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் போராட்டங்களின் மீதும் அரசு எப்போதும் அலட்சியப்போக்கையே காட்டி வருகிறது.

தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கு முறைப்படி தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால், கட்டாயம் தேர்ச்சிபெற்றிருப்பார்கள். ஆனால், வாய்ப்புகள் வழங்கப்படாமல் ஆசிரியர்களை மட்டும் தகுதியற்றவர்கள் எனக் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? உண்மையில் தகுதியற்றவர்கள் இந்த அரசுதான்!" என்றனர்.

இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்கள், "இப்போது பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆசிரியர்கள் பணியில் சேரும்போது அவர்களுக்கு இந்த நிர்பந்தங்கள் எல்லாம் விதிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் பணியில் சேர்ந்தபிறகு, 'தேர்ச்சி பெறவில்லை' என வேலையிலிருந்து நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மட்டுமல்லாமல், தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களிலும் புதிதாக மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. ஆசிரியர்கள் மீதான அரசின் அலட்சியத்தால் இந்த மாதம் அரசு சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், அடுத்த மாதம் நடுரோட்டில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்றனர்.

தீர்வை நோக்கி நகர வேண்டியது ஆசிரியர்களா... அரசா?

6 comments:

 1. அரசு பள்ளியில் TET pass ஆகாமல் வேலை பார்ப்பவர்களுக்கும் இது பொருந்துமா

  ReplyDelete
 2. அரசு பள்ளியில் TET pass ஆகாமல் வேலை பார்ப்பவர்களுக்கும் இது பொருந்துமா

  ReplyDelete
 3. அரசு பள்ளியில் TET pass ஆகாமல் வேலை பார்ப்பவர்களுக்கும் இது பொருந்துமா

  ReplyDelete
 4. May 23ku appuram intha government irukathu. 1500 teachers dismisskulla intha government dismiss aidum

  ReplyDelete
 5. tet பாஸ் பண்ணி 3 ஆண்டு ஆச்சி இன்னு வேலை கெடிக்கிலே ஆன இவங்க salary அவ்ளோ குடுங்க இவ்ளோ குடுங்க அன்றாங்க pls 10000 போதும் யங்களுக்கு வேலை குடுங்க govt...

  ReplyDelete
 6. திறமை இருந்தால் தனியார் பள்ளியிலயே 40000 வாங்கலாம் ஏன் 10000 கேட்குர

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி